காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த புறப்பட்ட விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் 20 பேர் இன்று (ஜூலை 3) கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் அருகே 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 700 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கலைஞர் கனவு இல்லத் திட்ட சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராமத்திலும் நடைபெற்றது. ஆனால் ஏகனாபுரம் கிராத்தில் நடத்தப்படவில்லை. விமான நிலைய திட்டத்துக்காக அந்தக் கிராமம் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், போராட்டக் குழுவினர் 20 பேர் இன்று ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கூடி விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் காஞ்சிபுரம் நோக்கி கிளம்ப முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து சுங்குவார்சத்திரம் தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது கிராம மக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தையொட்டி ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.