மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் ஆனி பிரம்ம உற்சவத்தை 10 நாட்கள் நடத்தக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். ஸ்ரீ ராமநாதசுவாமிக்கு ஆனி மாதம் ஸ்ரீ ராமலிங்க பிரதிஷ்டை பிரம்ம உற்சவம், கோயில் ஆகமவிதி மற்றும் சம்பிரதாயப்படி 10 நாட்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டுகளில் 3 நாட்கள் மட்டுமே இந்த உற்சவ நிகழ்வு நடத்தப்பட்டது. இது திருக்கோயிலின் ஆகமவிதி மற்றும் சம்பிரதாயத்துக்கு எதிரானது.
ஆனி மாதத்தில் நடைபெறக்கூடிய இந்த உற்சவம் திருக்கோயிலின் தல வரலாற்றை விளக்கும் விதமாக இருக்கும். இந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆனி உற்சவ விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆனி உற்சவ விழாவை 10 நாட்களுக்கு நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ராமேஸ்வரம், ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயிலின் ஆனி பிரம்ம உற்சவ விழாவை 10 நாட்கள் நடத்த உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் கே. நீலமேகம், தேவராஜ் மகேஷ் வாதிடுகையில் “ஆனி உற்சவம் ஆகம விதிப்படி 10 நாட்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் சில வருடங்களாக 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஆனி உற்சவ நிகழ்வை 10 நாட்கள் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “எந்த ஆண்டு முதல் ஆனி உற்சவ நிகழ்வு 10 நாட்கள் நடத்தப்பட்டது? எந்த ஆண்டிலிருந்து இருந்து அது 3 நாட்களாக குறைக்கப்பட்டது? என்பது குறித்து கோயில் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.