தமிழகம்

சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்

ச.கார்த்திகேயன்

சென்னை: மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். கடந்த 2023-34 நிதியாண்டில் மாநகராட்சியில் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகமாகும்.

சிலர் ரூ.1 கோடிக்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனர். இதுபோன்ற நீண்ட கால நிலுவை வைத்துள்ளோர் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவர்களில் அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மாமன்ற அனுமதி கிடைத்தவுடன் இணையத்தில் வெளியிட உள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ரூ.382 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த அரையாண்டுக்கான சொத்து வரியை செப்.30-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அத்தொகைக்கு மாதம் 1 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT