சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே., 10) வெளியாகியிருக்கும் நிலையில், புத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் மொத்தம் 20,691 மாணவர்கள் சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.
பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் அதிகபட்சமாக 20691 பேர்100க்கு 100 முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதோடு பாட வாரியான தேர்ச்சி விகிதத்தை பார்க்குபோது, தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதமும், கணிதத்தில் 96.78 சதவிகிதமும், அறிவியலில் 96.72 சதவிகிதமும், சமூக அறிவியலில் 95.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 13510. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 12491 ஆகும். தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 260. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 228 (87.69%) ஆகும்.