சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்த வழக்கில், வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகியோர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் ஏற்கெனவே ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர், 45 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். எனவே, அதனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.