கோப்புப்படம் 
தமிழகம்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப்.26-ல் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு: அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 26-ம் தேதிக்கு கீழமை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, தீர்ப்பை ஏப்ரல் 26-ம் தேதிக்கு கீழமை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது? ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி, அது தொடர்பான விவரங்களை தெரிவிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்.18) தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT