

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஆளு நரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவின் அறிக்கையை வெளியிடக் கூடாது என தடை விதித்து இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டதா என்றும், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்றும், அந்த குற்றவழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்தும், கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், நிர்மலாதேவி கடந்த 2018-ம் ஆண்டேபணியிடை நீக்கம் செய்யப்பட்ட தாகவும், அந்த குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடைபெற்று வருவதாக வும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், அந்த குற்றப்பத்திரிகையின் நகலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கும், நிர்மலா தேவிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைவிவரங்களை தாக்கல் செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழக தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.