மதுரை: “தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிடுவார்” என்று அதிமுக வேடபாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மேலூர் பகுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான விவி.ராஜன் செல்லப்பா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “மக்கள் மத்தியில் திமுக எதிர்ப்பு மனநிலை உள்ளது. அது தேர்தல் நாளில் வெளிப்படும். அதனால், அதிமுக வேட்பாளர் சரவணன், பொதுமக்களிடம் தயக்கமில்லாமல் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். மக்ககளும் அதிமுகவினரை அன்போடு வரவேற்கிறார்கள்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரிக்க முடியாமல் எதிர்ப்பு அலை உருவாகிவிட்டது. செல்லும் இடமெல்லாம் மக்கள்ள அவரை விரட்டி அடிக்கிறார்கள். தேர்தல் களத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. அவர் மக்களுக்கு எந்தத் தியாகம் செய்யவில்லை. போராட்டமும் நடத்தவில்லை.
மத்தியில் இருக்கும் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எல்லோரையும்ம விமர்சிக்கிறார். 2024-ம் ஆண்டு அண்ணாமலை பதவிக்கு கண்டம் வந்துவிடும். இந்த தேர்தலில் பாஜக 5-வது இடத்துக்குச் சென்று விடும். இதனால் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் ஆடு மேய்க்க சென்று விடுவார்” என்று பேசினார்.