நயினார் நாகேந்திரன், ராபர்ட் புரூஸ் 
தமிழகம்

திமுக Vs பாஜக - நயினார் நாகேந்திரன், ராபர்ட் புரூஸ் மீதான புகார்களால் நெல்லை தொகுதியில் பரபரப்பு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அணியினர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

மக்களவைத் தேர்தலில், திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது.

பெரும் பரபரப்பு இல்லாமல் தேர்தல் களம் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் பாளையங்கோட்டை மகாராஜநகரிலுள்ள திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் பல லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகனின் அலுவலகம் மற்றும் விஜயநாராயணத்திலுள்ள அவரது வீடு ஆகியவற்றில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனிடையே, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக உறுப்பினர் உட்பட 3 பேரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபர்களிடம் சோதனை நடத்தபட்டது.

இதனால், திருநெல்வேலி மக்களவை தேர்தல் களம் பரபரப்பான நிலையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஞாயிறன்று நெல்லை மக்களவை தேர்தல் பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பதிலுக்கு திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அணி மற்றும் இந்து முன்னணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் டி. பாலாஜி கிருஷ்ணசாமி தலைமையில் மத்திய அரசு வழக்கறிஞரும் இந்து முன்னணி மாநில செயலருமான கா.குற்றாலநாதன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப.கார்த்திகேயனிடம் இன்று மனு அளித்தனர். அதில், “பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள திமுக மாவட்ட செயலர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது, யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் முறைப்படி வெளியாகவில்லை. திமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம், திமுக கூட்டணி வேட்பாளர் சி.ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பிரித்து கொடுக்கப்பட்ட தொகை எனக்கூறப்படுகிறது.

பல லட்சங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பல கோடிகள் கைப்பற்றப்பட்டு மறைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் யூகங்களாக பேசிக்கொள்ளும் நிலையுள்ளது. திமுக அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் யாருடைய இல்லத்திலும் சோதனை நடத்தப்படவில்லை.

ஆனால், அதற்கு நேர்மாறாக திசை திருப்பும் வகையில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனையிட்டு பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது ஒருதலைபட்சமான நடவடிக்கையாகும்.

காங்கிரஸ் கூட்டணி பிரமுகர்கள் வீடுகளிலும் முழுமையாக சோதனை நடத்தி, திருநெல்வேலி தொகுதியில் தேர்தலை நேர்மையாக நடத்தவும், திமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் முழு விவரத்தையும் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் சி. ராபர்ட் புரூஸை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT