Published : 08 Apr 2024 04:26 PM
Last Updated : 08 Apr 2024 04:26 PM

“திமுக முன்பு கூட்டணியில் இருந்தபோது பாஜக சமூக நீதி பேசியதா?” - சீமான் கேள்வி @ தருமபுரி

தருமபுரி: “பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது பாஜக சமூக நீதி பேசும் கட்சியாக இருந்ததா?” என தருமபுரி பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து தருமபுரி நகரில் 4 ரோடு பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது: “அதிகாரமற்ற, எளிய மக்களாக தமிழ் மக்கள் இருப்பதை எவ்வளவு காலம் சகித்துக் கொண்டு இருப்பது. எங்கள் கண் முன்னே எங்கள் வளங்கள் களவு போய்க் கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இல்லை. அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துவிட்டு அல்லல்படுகிறோம். இதை தடுக்கவும், என் நிலத்தின் வளத்தை காக்கவும் இந்த மண்ணின் பிள்ளைகள் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறோம்.

தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது, சமூக நீதி பேசிவிட்டு பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்கலாமா என கேட்டுச் சென்றார். முன்பு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜக சமூக நீதி பேசியதா? திராவிடக் கட்சிகள் எதுவுமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வராது. இந்தியாவில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி நடந்தது. ஆனால், அரை அங்குல வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதா? காவிரி நதி நீரில் தமிழகத்துக்கு உரிமையில்லை. அதை பெற்றுத் தராதவர்களுக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீட்டை வழங்காத நிலையில் தமிழகத்தில் பாஜக-வையும், காங்கிரஸையும் தோற்கடிக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சி, மோடி ஆட்சி காலங்களில் கச்சத் தீவை திரும்பப் பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது சமையல் எரிவாயு விலையை குறைப்பதெல்லாம் தேர்தல் அரசியல். இது மக்களுக்கான அரசியல் எனில் ஓராண்டுக்கு முன்பே குறைத்திருக்கலாமே. 40 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் பணி வாய்ப்பை வலியுறுத்தி போராடியபோது அடக்கினீர்கள்.

ஆனால், தேர்தல் வருவதால் தமிழக அரசு அவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறது. மக்களுக்காக யார் தன்னலமின்றி பணி செய்வார்கள் என்பதை அறிந்து அதிகாரத்தை கொடுங்கள். சட்டப் பேரவை உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதால் உருவாகும் இடைத்தேர்தல்களால் தேவையற்ற இடையூறுகளும், பொருட்செலவும் ஏற்படுகிறது. இந்த செலவை அவர்களே ஏற்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும். இத்தகைய அடிப்படை மாற்றங்களையே நாம் தமிழர் கட்சி கொண்டுவர விரும்புகிறது.

சீட்டுக்கும், நோட்டுக்கும் அலையும் கூட்டத்தை ஒழித்து நாட்டுக்கு வேலை செய்பவர்களை தேடும்போதுதான் நாடும், மக்களும் நலமாக வாழ முடியும். இதுவரை எந்த பதவியிலும் இல்லாத நாங்கள், உங்களின் அனைத்து பிரச்சினைகளின் போதும் உங்களுடன் இருந்துள்ளோம். இந்த தேர்தலில் என் அன்பு மக்கள் எங்களோடு இருங்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்” என்று சீமான் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x