சேலம்: மக்களவைத் தேர்தலுக்காக திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட சேலம் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார்.
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தள்ளார். சேலம் பெங்களூரு பை-பாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தங்கியிருந்தார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மநீம தலைவர் கமல்ஹாசனும், சேலத்தில் முகாமிட்டபடி பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தங்கியுள்ள ஹோட்டலுக்கு மநீம தலைவர் கமலஹாசன் நேரில் சென்று அவரை சந்தித்து, அரை மணி நேரம் உரையாடினார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சாரம் குறித்தும், மக்களிடையே கிடைக்கப்பெற்ற வரவேற்பு குறித்தும், வெற்றி வாய்ப்புக்கான சூழல் குறித்தும் முதல்வர் ஸ்டாலினுடன் கலந்துரையாடினார்.
பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மநீம தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரது தெரிவித்துள்ள நிலையில், அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
மநீம தலைவர் கமலஹாசன் சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டம் சேலத்தில் நடப்பதால், அவரது தனது பிரச்சார நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.