

1967-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் திமுக சார்பாகக் களமிறங்கினார் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. ஆனால், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தும் பதவியை ராஜினாமா செய்தார் அண்ணாதுரை... ஏன் தெரியுமா?
1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்டது. அது தொடங்கப்பட்ட 18 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் அது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அந்த ஆண்டுதான் 1967. ஆனால், அந்த ஆண்டு தமிழக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட சிறிய கால இடைவேளையில் பிப்ரவரி மாதம்தான் நடைப்பெற்றது.
அந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக தென்சென்னை தொகுதியில் அண்ணா களமிறங்கி வெற்றி பெற்றார். அவரோடு 24 திமுக எம்பிக்கள் மக்களவைக்குச் சென்றார்கள். அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனால், தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் அண்ணா.
தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் முரசொலி மாறன் களமிறங்கி வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னை முகமாக அவர் மாறிப்போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொறுத்தவரை கீழவை, மேலவை என்னும் நடைமுறை இருந்தது. எனவே, அண்ணா தமிழகத்தின் முதல்வராக தொடர மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர் இரண்டே ஆண்டுகளில் மரணமடைந்தார். ஆகவே,
அந்த மக்களவை ராஜினாமா தான் தமிழக அரசியலுக்கு முக்கியமான ஒரு முதல்வரை வழங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.