தமிழகம்

கேஜ்ரிவால் கைதை கண்டித்து செல்போன் டவரில் ஏறி போராட்டம்: ஆம் ஆத்மி கட்சியினர் கைது @ புதுச்சேரி

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்தனர். இந்த விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் கைதைக் கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள செல்போன் டவர் மீது இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். ஆம் ஆத்மி மாநிலச் செயலர் ஆலடி கணேசன் தலைமையிலானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக இண்டியா கூட்டணியின் வேட்பாளர் வைத்திலிங்கத்தை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆதரவு செரிவித்தனர்.

SCROLL FOR NEXT