தமிழகம்

மதுரையில் ரூ.18 கோடி மதிப்பிலான 29.70 கிலோ தங்கம், வைரம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

என். சன்னாசி

மதுரை: மதுரை அருகே வாகனத் தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்புள்ள 29.70 கிலோ தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகள் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 மக்களவை தொகுதிகளிலும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி சந்திப்பு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் பகுதியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் ரூ.18 கோடி மதிப்புள்ள 29.70 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பது தெரியவந்தது.

முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறி, அவற்றை பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தெற்கு சார்நிலை கருவூலத்தில் பறிமுதல் செய்த நகைகள் ஒப்படைக்கப்பட்டன.

முதல்கட்ட விசாரணையின்படி, மதுரை மாநகர் பகுதியிலுள்ள நகைக்கடைகளுக்கு அந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், உரிய ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் திருப்பி வழங்குவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT