தமிழகம்

“அதிமுக, பாஜகவுடன் சமக கூட்டணி பேச்சுவார்த்தை” - சரத்குமார் தகவல்

கி.மகாராஜன்

மதுரை: “அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி அறிவிக்கப்படும்” என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

மதுரை காமராஜர் சாலையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியது: “திமுக தவிர அதிமுக, பாஜக நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி அறிவிக்கப்படும். மக்களின் முன்னேற்றம், வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும், தொழில் வளத்தை அதிகரிக்க வேண்டும் என்பது எங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் போதை கலாச்சாரம் பெருகியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும். பின்னணியில் பெரும் புள்ளிகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் கடன் ரூ.8.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கடனை எப்படி அடைக்க போகிறார்கள்? என்ன திட்டம் வைத்துள்ளார்கள்? தொடர்ந்து இலவசங்கள் வழங்கி வருகின்றனர்.

கல்விக்கும், மருத்துவத்துக்கும் தான் இலவசம் வழங்க வேண்டும். இலவச பொருட்கள் வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும். மக்கள் இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT