

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த சமக சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. கடந்த 24-ம் தேதி இதுபற்றி பேசி உள்ளோம். கட்சியின் மேல்மட்ட கூட்டத்தில் எந்த கூட்டணி என்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. இதில் கட்சி நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை.
அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பாஜக நிர்வாகிகளும் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றி அறிவிப்போம். திருநெல்வேலியில் எனக்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதனால் திருநெல்வேலி தொகுதியில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஒரு வாரத்தில் தெரிவிப்பேன் என்றார்.