தமிழகம்

தூத்துக்குடி விழா மேடையில் இருந்த எ.வ.வேலு, கனிமொழி பெயரை ‘தவிர்த்த’ பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திமுக - பாஜக இடையே மோதல்போக்கு அதிகரித்து வரும் நிலையில், குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் விழாவில் பேசிய பிரதமர் மோடி, திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் எ.வ.வேலு பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது, ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் தனது உரையை தொடங்கும்போது, விருந்தினர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி. அதன்படி, ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் போன்றோர் பெயரை உச்சரித்த பிரதமர் மோடி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக, மாநில அமைச்சர் என்று மட்டுமே பிரதமர் மோடி குறிப்பிட்டார். கனிமொழி பெயரையோ, அவரை வரவேற்கவோ செய்யவில்லை. பின்பு தனது உரையை தொடர்ந்த பிரதமர் மோடி தமிழக அரசு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பேசும்போது, "தமிழக வளர்ச்சியில் தமிழர்களின் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன். தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என்மீது பாசத்தை பொழிந்தார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பல மடங்காக திருப்பி தருவேன்.

வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை தமிழக அரசு செய்தியாக வெளியிடுவதில்லை. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்" என்று பேசினார்.

SCROLL FOR NEXT