எல்.முருகன்
எல்.முருகன்

2047-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம்: எல்.முருகன் பேச்சு @ தூத்துக்குடி

Published on

தூத்துக்குடி: “பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே. அதை நோக்கி பிரதமர் மோடி லட்சியத்தோடு அடியெடுத்து வைத்துள்ளார்.” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். குறிப்பாக, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

அப்போது பேசிய எல்.முருகன், “இந்தியில் மோதி என அழைக்கப்படும் தூத்துக்குடி முத்து நகருக்கு இன்றைக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கிட வந்துள்ளார். மோடி எப்போது எல்லாம் தமிழகத்துக்கு வருகிறாரோ அப்போது எல்லாம் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். கடந்த முறை தமிழகத்துக்கு வந்து திருச்சி விமான நிலையத்தை தொடங்கி வைத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்தார்.

இரண்டே மாதங்களில் இப்போது ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை கொடுக்க வந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது.

உலகத்திலேயே சந்திரனின் தென் துருவத்தில் கால்பதித்தது விண்கலம் சந்திராயன் 3. இதை அனுப்பியவர் பிரதமர் மோடி. விண்வெளி துறையில் உலகத்துக்குக்கே முன்னோடியாக இருந்து வருகிறது இந்தியா. பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047-ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே. அதை நோக்கி பிரதமர் மோடி லட்சியத்தோடு அடியெடுத்து வைத்துள்ளார்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in