சென்னை: திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ-வுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டி வருகிறது. கட்டுமானப் பணியில் ஆழ்துழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது.
அந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள். மேலும், அப்பகுதியில் பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்புகளும் இருப்பதால் கட்டுமான பணிகளின் சப்தத்தால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை இக்கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினேன்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு ஏற்படுவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிஎம்டிஏ, காவல் துறையினருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை தடைவிதிக்க வைக்க வேண்டும். ஒலி மாசுவை கட்டுப்படுத்தாமல் விதிகள் மீறுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிஎம்டிஏ தரப்பில் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மருத்துவமனைக்கு திட்ட அனுமதி கோரிய விண்ணப்பம் நிலுவையில் உள்ளபோதே, அருகில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் பள்ளிக் கட்டிடத்தில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
சிஎம்டிஏ கடந்த 8-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. புகார் அளித்த பள்ளியின் கட்டிடம் உரிய திட்ட அனுமதி பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் திட்ட அனுமதி தொடர்பாக தற்போது கேள்வி எழுப்ப என்ன காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மாநகராட்சி தரப்பில், மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்த பிறகு பள்ளி பழுது பார்க்கப்படும் என கூறியிருந்தனர்.மேலும், கட்டுமானப் பணிகள் நடக்காது என உத்தரவாதமும் அளித்திருந்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாசு கட்டுபாட்டு வாரியம் பிப்ரவரி 2-ம் தேதி ஆய்வு செய்தபோது, ஒலி மாசு இருந்ததும், அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு லஞ்சம் பெற்று கொண்டு திட்ட அனுமதிகளை அதிகாரிகள் வழங்குவதாக கடும் கண்டனம் தெரிவித்தனர். சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள்தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய வீடு கட்ட வேண்டும் என்றால்கூட லஞ்சம் கேட்பதாக அதிருப்தி தெரிவித்தனர். அப்போது கட்டுமான பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கெனவே விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கியதுடன், திட்ட அனுமதியை பின்பற்றிதான் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறி விட்டதாக அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாய், தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
இந்த அபராத தொகையான 37 லட்சம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவனத்துக்கு செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தனியார் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து, சிஎம்டிஏ., சென்னை மாநகராட்சி, மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.