சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் இன்றும் இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று பிற்பகலில் ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை செய்தபோது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறையில் மருந்து கலவை செய்துகொண்டிருந்த அருணாசலபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (21) சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், மற்ற தொழிலாளர்கள் அனைவரும் பதற்றமடைந்து ஆலையிலிருந்து தப்பியோடினர்.
தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அஜித்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.