சென்னை: "அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்தான் எங்கள் நோக்கமே" என்று தமிழக வேளாண் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து வேளாண் துறை முதன்மை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், "அனைத்து விவசாயிகளையும் அனைத்து பயிர்களையும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது இந்த பட்ஜெட். அனைத்து மாவட்டத்துக்கும் ஒவ்வொரு திட்டத்தை கொடுத்துள்ளோம்.
மண் வளத்தை பேணி காப்பது என்பது இந்த பட்ஜெட்டின் முக்கியமான கான்செப்ட். மண் வளத்தை காப்பாற்றினால்தான் ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்கள் கிடைக்கும். தற்போதைய சூழலில் பணியாட்கள் பற்றாக்குறை இருப்பதால், வேளாண் பணிகளை இயந்திரமாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
விளைபொருட்களை மதிப்புக்கூட்டி புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்துள்ளோம். மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரை, இதுதான் இந்த பட்ஜெட்டில் அடிப்படை.
கரும்பு ஆலைகளை பொறுத்தவரை கடந்த வருடம் பெரும்பாலும் லாபத்துடன் இயங்கின. கரும்பு விவசாயிகளுக்கும் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டு வரும் கரும்பு ஆலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு வெட்டுவதற்கு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. கரும்பு விவசாயத்தை பொறுத்தவரை காலநிலை மாற்றத்தை விளைச்சலும், வருவாய் கிடைக்கும்.
தருமபுரி போன்ற சில மாவட்டங்களில் பேரீச்சை பயிரிட்டுள்ளார்கள். அது போன்றவர்களை ஊக்கப்படுத்தவே பட்ஜெட்டில் பேரீட்சை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.208 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த அரசாணை இன்றைக்குள் வெளியாகிவிடும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய 100 உழவர் அங்காடிகள் திறக்கப்படவுள்ளன. இந்த உழவர் அங்காடியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வேளாண் துறை மூலம் வாங்கி வந்து விற்கப்படும்" என்று அவர் விளக்கமளித்தார். | வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024 அம்சங்கள்: 100 உழவர் அங்காடிகள் முதல் கரும்புக்கு ரூ.215 ஊக்கத்தொகை வரை