படம்: என்.ராஜேஷ்

தமிழகம்

தூத்துக்குடி அருகே கட்டுமான பணியின்போது தேவாலய மேற்கூரை சரிந்து விழுந்து 12 பேர் காயம்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தேவாலய கட்டுமான பணியில் காங்கிரீட் போடும்போது மேற்கூரை சரிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் புனித நல்ல ஆலோசனை மாதா ஆலய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.13) காலையில் மேற்கூரை காங்கிரீட் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்தப் பணியில் 42 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, மதியம் 12 மணியளவில் திடீரென காங்கிரீட் மேற்கூரைக்காக கீழே முட்டு கொடுக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகள் எதிர்பாராத விதமாக விலகியுள்ளன. இதனால் காங்கிரீட்டை தாங்குவதற்காக வைத்திருந்த பலகைகள் விலகி, காங்கிரீட் மேற்கூரை மளமளவென சரிந்து விழுந்தது. இதனால் காங்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு படையினர், தாளமுத்து நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த மூர்த்தி (38), வெள்ளப்பட்டியை சேர்ந்த அந்தோணிராஜ் (52), தட்டப்பாறையை சேர்ந்த ராமர் (29), பிஹார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் சிங் (32), தூத்துக்குடி அமுதாநகரை சேர்ந்த மணிகண்டன் (22), குறுக்குச்சாலையை சேர்ந்த சுபாஷ் (22), கும்பகோணம் பருத்திக்குடியை சேர்ந்த முரளிதரன் (42), விஜய் (44), தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த சேகர் (42), தாளமுத்துநகரை சேர்ந்த சந்திரசேகர் (42), வெள்ளப்பட்டியை சேர்ந்த மரியநிக்சன் (34), ராஜ்குமார் (45) ஆகிய 12 பேரும் காயமடைந்தனர்.

அவர்கள் 12 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT