திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி, கொடைக்கானலில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. பழநியில் அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று (டிச.17) இரவு 7 மணி முதல் இன்று (டிச.18) காலை 11 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி விடுமுறை அளித்தார். தொடர் மழையால் கொடைக்கானல் நட்சத்திர எரியில் நீர் வரத்து அதிகரித்து உபரி நீர் மறுகால் பாய்ந்தது. வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர் சோலா அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, எலிவால் அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இன்று பகலில் மழைக்கு பின் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவியது.
மழை காரணமாக மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானல் ரோஜா பூங்கா பகுதியில் 82.5 மி.மீ, பிரையன்ட் பூங்கா பகுதியில் 93.6 மி.மீ. மழை பதிவானது. பழநியிலும் நேற்று இரவு முதல் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை இன்று பகலிலும் நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
தொடர் மழையால் பழநி அடுத்துள்ள பெருமாள்புதூர் அருகே பச்சையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் நீர் வரத்து குறையும் வரை பொதுமக்கள் கிராமங்களிலேயே முடங்கினர். அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக புளியம்பட்டி, பாலாறு பகுதி வழியாக 8 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு நகர் பகுதிக்கு சென்றனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி 51 மி.மீ. மழை பதிவானது.
வெள்ள அபாய எச்சரிக்கை: தொடர் மழையால் கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதில் வரதமாநதி அணை (மொத்தம் 66.47 அடி) முழு கொள்ளளைவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. பாலாறு பொருந்தலாறு (மொத்தம் 65 அடி) 63.52 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், குதிரையாறு அணையின் நீர்மட்டம் (மொத்தம் 80 அடி) 78 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 325 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் வெள்ள நீரில் வினாடிக்கு 325 கன ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.