ஆந்திராவில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி புயல் கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக, வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 118 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரையிலான கனமழை தொடர்பான அப்டேட்ஸ் இங்கே...
புயல் நிலவரம்: டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 4-ம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | விரிவாக வாசிக்க > வானிலை முன்னெச்சரிக்கை: சென்னை, செங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு டிச.4-ல் மிக கனமழை
பள்ளிகளுக்கு விடுமுறை: புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. | முழுமையாக வாசிக்க > டிச.4-ல் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் இருந்தே விட்டுவிட்டு கனமழை நீடித்து வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை காவல் துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்: “அவசியமின்றி வெளியே வராதீர்கள்” - சென்னை காவல் துறையின் புயல், மழை முன்னெச்சரிக்கை குறிப்புகள்
118 ரயில்கள் ரத்து: மிக்ஜாம் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. | வாசிக்க > புயல் முன்னெச்சரிக்கை - 118 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
அமைச்சர் தகவல்: மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்பகுதிக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம். புயலால் சேதம் அடையும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரம்: இன்று (02.11.2023) மிக்ஜாம் புயலை (வடகிழக்கு பருவமழை) முன்னிட்டு சென்னை பெருநகர காவல் வரம்பில் தற்போதைய நிலவரம்: புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத்துறையின் ஒருங்கிணைப்பில் அகற்றப்படும் முக்கிய நீர் தேங்கியுள்ள பகுதிகள் எதுவும் இல்லை. நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள், சாலைகளில்விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல், பதிவாகியுள்ள இறப்புகள், நீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விவரம் எதுவும் இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
மின்துறை நடவடிக்கைகள்: வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையத்தில், மின் மாற்றி பழுது நீக்கும் பணியினை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் அவர் வழங்கிய அறிவுறுத்தல்கள்:
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மாவட்டந்தோறும் இருக்கக்கூடிய கட்டுப்பாட்டு மையங்களில் மின்சார துறையின் பொறியாளர்கள் களப்பணியிலே இருக்கிறார்கள். அதேபோல், அந்தந்த செயற்பொறியாளர்களின் கீழ் பணியாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு தேவையான இடங்களில் பணிகள் மேற்கொள்ள இப்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனமழை மிகப் பெரும் கனமழையாக இருந்தாலும் சரி, புயலாக நம்மைக் கடந்து சென்றாலும் அதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 3,00,000 மின் கம்பங்கள், 15,000 கி.மீ. மின் கம்பிகள் மற்றும் 15,000 களப்பணியாளர்கள் 24X7 தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான தளவாடப் பொருட்கள் எந்நேரமும் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கடலோர மாவட்டங்களில் குறிப்பாக கனமழை எதிர்ப்பார்க்கும் திருவள்ளுர் அல்லது சென்னை போன்ற இடங்களில் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணலி போன்ற பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் நம்முடைய மின் நிலையங்களிலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுமைக்கும் தேவையான ஜே.சி.பி., கிரேன் போன்ற வாகனங்கள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்கள் தேவைக்கேற்ப தயாராக வைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் இந்த மழைக்காலத்தை எதிர்கொண்டு பொதுமக்களுக்கு சீரான தடையற்ற மின்சாரம் வழங்குமாறு பார்த்துக் கொள்ளவும், அப்படியே ஏதாவது பழுது ஏற்பட்டாலும் அதனை உடனடியாக நீக்கி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, இங்கே சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் 110 கி.வோ துணைமின் நிலையத்திலுள்ள உயரழுத்த மின்மாற்றியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக பழுது நீக்கி இயக்கத்திற்கு கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனவே, மின்வாரியத்தை பொருத்தமட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மின்வாரியம் தயாராக உள்ளது.
இரவு நேரங்களில் குறிப்பாக மழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைக்கு புகார் அளிக்க மின்னகத்தில் ஒரே நேரத்தில் 65 அழைப்புகளை ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்காணிக்க தனியாக அலுவலர்களும் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி மின் சாதனங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்திருந்தாலோ உடனடியாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்திற்கு 94987 94987 என்ற எண்ணிற்கோ அல்லது மின் தடை நீக்க மையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறும், பொதுமக்கள் மழைகாலங்களில் மின் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனத்துடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இபிஎஸ் சரமாரி சாடல்: “சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தண்ணீர் எங்கும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால், ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது.
திமுக அரசு முழுமையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தியிருந்தால் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும். நிர்வாகத் திறமை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது. ஊழல் செய்வதை மட்டுமே இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்து வருகிறது. அதை மட்டுமே இவர்களின் சாதனையாக பார்க்க முடிகிறது” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். | முழுமையாக வாசிக்க > தேங்கும் மழைநீர், ஃபார்முலா 4 ரேஸ், அண்ணாமலை ‘மெச்சூரிட்டி’ - இபிஎஸ் சரமாரி விமர்சனம்