

சென்னை: புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிச.3) புயலாக வலுப்பெற்று டிச.4-ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, 5-ம் தேதி நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 4-ம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 118 ரயில்களை ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 3 முதல் 7-ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.