சென்னை: "அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 45 இடங்களில் கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 2 இடங்களில் அதி கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில், 37 செ.மீ மழையும், கோத்தகிரியில் 24 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்து வரும் மூன்று தினங்களைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்துவரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவுகள், கேரள கடற்கரைப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது, 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும் 26-ம் தேதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், 27-ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல்பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது, 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26-ம் தேதிக்கு முன்பாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று (நவ.23) வரையிலான காலக்கட்டத்தில், பதிவான மழையின் அளவு 28 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் சராசரி அளவு 32 செ.மீ. இது 10 சதவீதம் இயல்பைவிட குறைவு என்று அவர் கூறினார்.