

நீலகிரி/கோவை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் அதிகனமழை பெய்துள்ளது.
இன்று (நவ.23) காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரியின் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 37.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி கனமழை காரணமாக உதகை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே தரைப்பாலங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பாய்வதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பாதையில் மரங்கள் முறிந்துள்ளதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் பேரிகேடுகள் அமைத்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
8 மாவட்டங்களுக்கு விடுமுறை: இதற்கிடையில், குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 27-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.23) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு: இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
இதற்கிடையே கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு இன்று (நவ.23) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.