சென்னை: "உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா" என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை மீம் போட்டு கலாய்த்துள்ளார் தொழில்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா.
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணமாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, சென்னையை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகள் என நேற்று முன்தினம் மொத்தம் 2,734 பேருந்துகள் இயக்கப்பட்டு, சென்னையில் இருந்து 1.36 லட்சம் பேர் பயணித்தனர். சென்னையில் இருந்து நேற்று 1,895 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, பயணிகள் சிரமங்களின்றி பயணங்கள் மேற்கொள்ளும் விதமாக புகார்களை நேரடியாக கண்காணிக்கும் விதமாகவும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை பூந்தமல்லி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையம், மாதாவரம் பேருந்து நிலையம், சானிடோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தொழில் துறை அமைச்சரான டிஆர்பி ராஜா மீம் ஒன்றை பகிர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஜாலியாக கிண்டல் செய்துள்ளார். தனது எக்ஸ் பக்க பதிவில், "அண்ணா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?!" என்று பதிவிட்டு, மீம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த மீம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
அதேபோல் அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றொரு பதிவில், தனது வீட்டில் தீபாவளி பலகாரம் தயாரிப்பதில் நிகழ்ந்த நகைச்சுவையும் பகிர்ந்துள்ளார். தனது வீட்டினர் செய்த பலகாரம் எதிர்பார்த்த அளவுக்கு வராததை காமெடியாக சுட்டிக்காட்டும் விதமாக, "எல்லா பலகாரமும் கடைல பாக்கெட் போட்டு விக்குறாங்களே, அப்பறம் எதுக்கு நமக்கு இந்த விஷப் பரீட்சை. ஏதோ ஒரு நாள் லீவ் கிடைக்குது ... அன்னைக்கும் இத சாப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணா என்னங்க செய்றது. நான் கேட்டேனா" என்று பதிவிட்டு பலகாரத்தின் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.