சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தலைநகர் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் கடை வீதிகள் நேற்று களைகட்டின.

சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. புத்தாடைகள் வாங்குவதற்காக தியாகாய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும், பூஜை பொருட்கள், பாத்திரங்கள் வாங்குவதற்காக கோயம்பேடு, மயிலாப்பூர், பெரம்பூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் குவிந்தனர். பட்டாசு வாங்குவதற்காக தீவுத்திடலில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

பாரிமுனை, தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை,புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகளிலும் பொருட்கள் பரபரப்பாக விற்பனையாகின. அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

தீபாவளியை முன்னிட்டு புது நகைகள் வாங்கவும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால், நகைக்கடைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு உட்பட அனைத்து நகரங்களிலும் நேற்று தீபாவளி விற்பனை களைகட்டியது. கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள்,அருகே உள்ள நகரங்களுக்கு சென்று புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்தனர்.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று புறப்பட்டனர். இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

சென்னையை பொருத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகள் என நேற்று முன்தினம் மொத்தம் 2,734 பேருந்துகள் இயக்கப்பட்டு, சென்னையில் இருந்து 1.36 லட்சம் பேர் பயணித்தனர். சென்னையில் இருந்து நேற்று 1,895 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நெரிசலை தவிர்க்க, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் மெப்ஸ்,தாம்பரம் ரயில் நிலைய பேருந்துநிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்,கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆம்னி பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலானோர் முன்பதிவுசெய்து பயணித்தனர். பேருந்துநிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம்வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினர். இதுபோன்ற விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுக்கள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டன.

தெற்கு ரயில்வே சார்பில் ‘வந்தே பாரத்’ உட்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இடம்பிடித்து பயணித்தனர்.

பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களை மக்கள் எளிதில் சென்றடையும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைஅதிகரிக்கப்பட்டிருந்தது. மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கின.

சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் ரயில்களில் 2 லட்சம் பேர், அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதுதவிர, கார், வேன் போன்ற சொந்தவாகனங்களிலும் பலர் சென்றுள்ளனர். அந்த வகையில், சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்றும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in