திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் லாரி  நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் 
தமிழகம்

செங்கம் அருகே கார் - லாரி நேருக்குநேர் மோதி விபத்து: பெங்களூரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூருக்கு கார் ஒன்று இன்று (அக்.15) காலை சென்றது. செங்கம் அருகே பக்கிரி பாளையம் என்ற இடத்தில் திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரியும் காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த செங்கம் உட்கோட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி இருந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் அவர்கள் விபத்து குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தனர். இது குறித்து மேல் செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT