ராமேசுவரம்: இலங்கை நெடுந்தீவில் தஞ்சம் அடைந்த 11 தமிழக மீனவர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் (சனிக்கிழமை) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு சூறைக்காற்றினால் இயந்திரப் பழுது ஏற்பட்டு நெடுந்தீவு அருகே தரைதட்டி நின்றது. படகிலிருந்த ரமேஷ், அமல தீபன், கெர்சின் ரிஷப், ஹென்றி ரோகித், ஜான் ரிச்சர்ட், வெள்ளைச்சாமி, அந்தோணி ஆனந்த், ரோகன், சீமன், ஆரோக்கிய அசோக், பெரியகருப்பன் ஆகிய 11 மீனவர்கள் வியாழக்கிழமை காலை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய நிலையில் அவர்களை நெடுந்தீவு போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆக. 21 வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.