கிரேன் மூலம் அகற்றப்பட்ட விபத்துக்குள்ளான பேருந்துகள்.

 
தமிழகம்

திருப்பத்தூர் அருகே விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம்: நான்குவழிச் சாலை அமைப்பதில் தாமதமாவதால் தொடரும் விபத்துகள்!

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும், நான்கு வழிச் சாலை அமைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் நேற்று மாலை 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மேட்டுப் பாளையம் பேருந்து ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சென்றாயன் (36), சிங்கம்புணரி முத்துமாரி (60), காரைக்குடியைச் சேர்ந்த கல்பனா (36), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அம்மன்குறிச்சியை சேர்ந்த தெய்வானை (55) உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்ததும் ஊர்குளத் தான்பட்டி, வைரவன்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பேருந்துகளில் சிக்கி கொண்ட சிலரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துமாரி, தெய்வானை, கல்பனா

இவ்விபத்தால் அப்பகுதியில் இரவு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டநிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் கிரேன் மூலம் பேருந்துகள் அகற்றப்பட்டன. காயமடைந்தோர் திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தோரை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங் களை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

மருத்துவர்கள் பற்றாக்குறை: இதனிடையே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்கு றையால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 12 மருத்துவர்களுக்கு பதிலாக 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். நேற்று ஒருவர் மட்டுமே இருந்ததால் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, தனியார் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் காயமடைந்த சிலர் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றனர்.

குறுகிய சாலை: திருப்பத்தூர், காரைக்குடி இடையே அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சாலை குறுகியதாக இருப்பதால், அதை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி வழியாக காரைக்குடிக்கு ரூ.750.52 கோடியில் 45.86 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

நான்கு வழிச் சாலை பணி முடிந்தால் பேருந்துகள் அந்த சாலையில் எளிதாக சென்றுவிடும் என்பதால், திருப்பத்தூர், காரைக்குடி இடையே சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை மாநில நெடுஞ் சாலைத்துறை கைவிட்டது.

ஆனால், நான்கு வழிச் சாலை பணி தொடங்கி 4 ஆண்டுகளை கடந்தும் இதுவரை முடிவடையாததால், திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி இடையே விரிவாக்கம் செய்யப்படாத பழைய சாலையிலேயே வாகனங்கள் பயணிக்கின்றன. அச்சாலை வளைவுகள் நிறைந்தும், ஆங்காங்கே குறுகலாகவும் உள்ளது. இதனால் அச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

தற்காலிக ஓட்டுநர்கள்: மேலும், அரசு பேருந்துகளில் தற்போது தற்காலிக ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். போதிய அனுபவமில்லாத ஓட்டுநர்

களாலும் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிலர் கூறியதாவது: அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சுதாகர் தற்காலிக ஓட்டுநர்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட காரைக்குடி மண்டலத்தில் 40 சதவீதம் தற்காலிக ஓட்டுநர்களே உள்ளனர். அதிலும் காரைக்குடி கிளையில் மட்டும் 60 சதவீதம் தற்காலிக ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்காமலேயே நீண்டதூர பயண பேருந்துகளை ஓட்ட அனுமதிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. முறையான பயிற்சி அளித்து நிரந்தர ஓட்டுநர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT