கோப்புப் படம்
சென்னை: பொதுமக்கள், பயணிகளின் வசதிக்காக, சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த நிதியாண்டில், 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், ரயில் நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், 2025-26-ம் நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், பயணிகள் தண்டவாளங்களைக் கடக்கும் ஆபத்தான முறையைத் தவிர்க்க புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த நிதியாண்டில், 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமேம்பாலங்களில் ஒன்று ‘அம்ரித் ரயில் நிலையத் திட்டத்தின்’ கீழ் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முக்கிய சிறப்பம்சமாக, 2026-ம் ஆண்டு மார்ச்சில் திருத்தணி ரயில் நிலையத்தின் 12 மீட்டர் அகலமுள்ள பிரம்மாண்டமான நடைமேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதிக அளவிலான பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், குறிப்பாக, கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களிலும், திருவிழாக் காலங்களிலும் பயணிகள் தடையின்றி பாதுகாப்பாகச் செல்ல உதவுகிறது.
இதேபோல், பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள வாலாஜாபாத், திருமால்பூர் மற்றும் அன்வர்திகன்பேட்டை ஆகிய நிலையங்களிலும் புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்தேரி, முகுந்தராயபுரம், பூடி, வேப்பகுண்டா, பொன்பாடி மற்றும் பாலூர் ஆகிய நிலையங்களிலும் புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை முதியவர்கள் மற்றும் சுமை தூக்கிச் செல்லும் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தண்டவாளங்களைக் கடக்காமல் பாதுகாப்பாக நடைமேடைகளுக்குச் செல்ல வழிவகை செய்கின்றன.
வரும் காலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் (Divyangjan-friendly features) உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.