படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் 100-வது ஆண்டு சித்தி தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அரவிந்தர் மற்றும் அன்னையை தரிசித்து தியானம் செய்தனர்.
கடந்த 1926-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதிதான் ஸ்ரீ அரவிந்தர் தனது யோக சாதனையால் சித்தி பெற்றார். அதனால்தான் இந்த நாள் 'சித்தி தினம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஆசிரமத்தின் பிறந்த நாள் என்றும் கருதப்படுகிறது. இந்தாண்டு சித்தி தின நூற்றாண்டு என்பதால், உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அரவிந்தரின் பக்தர்கள் புதுச்சேரியில் குவிந்தனர்.
இதையொட்டி ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை வசித்த அறைகள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தர் பயன்படுத்திய அறையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும், ஆசிரமத்தில் கூட்டுத் தியானம் நடைபெற்றது. அங்குள்ள ஸ்ரீ அரவிந்தரின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஸ்ரீ அரவிந்தர் - அன்னை சமாதியில் பக்தர்கள் மலர் தூவி, மவுன தியானத்தில் ஈடுபட்டனர்.