கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை மாவட்டத்தில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரிவாக்கு எண்ணும் மையத்திலும், விருகம்பாக்கம், சைதை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளின் இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 1,005 நபர்களை முதற்கட்டமாக சட்டப்பேரவை தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனை, அறிவுரைகளை அவர் வழங்கினார்.