இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 10 பேர்
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் 10 தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) காலையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனிடையே, நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்துள்ளனர். மேலும், படகில் இருந்த ஜார்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோக ராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 மீனவர்களை இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 ராமேசுவரம் மீனவர்களையும் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணைக்கு பின்னர் அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட 10 மீனவர்கள் மீதும், எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றக் காவலில் 10 தமிழக மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடப்பாண்டில் ஜனவரி மாதம் மட்டும் 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து 29 தமிழக மற்றும் புதுசேரி மாநில மீனவர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.