படம்: தி.நகர் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன்.
சென்னை மாநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வணிக மையமாகவும் திகழ்கிறது தி.நகர். இத்தொகுதியில் கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், வடபழனி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக 6 முறை வென்றுள்ள தி.நகர் தொகுதியில், இந்த முறை திமுக சார்பில் வேட்பாளராக ராஜா அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலரான இவர், மறைந்த முன்னாள் எம்எஎல்ஏ ஜெ.அன்பழகனின் மகன். 2021 தேர்தலில் இவரது சித்தப்பா ஜெ.கருணாநிதி எம்எல்ஏ ஆனார். இந்த முறையும் திமுக வென்றால் தொடர்ந்து 3 முறை வென்று திமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். அந்த நம்பிக்கையுடன் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராஜா அன்பழகன்.
இத்தொகுதியின் எம்எல்ஏவாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்யவுள்ள பல்வேறு பணிகள் குறித்து அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் செயல்படுத் தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம், உயர் கல்வி மாணவர்களுக்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற சாதனைத் திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
உஸ்மான் சாலை பாலம் புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமலும் அதே நேரத்தில் அவர்கள் சிரமமின்றி வியாபாரம் செய்யும் வகையிலும் இருசக்கர வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தி.நகர் முழுவதும் மழைநீர் வடிகால் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தி.நகர் தொகுதிக்காக 10 அம்ச திட்டத்தை தயாரித்து வைத்துள்ளேன்.
குறிப்பாக, வணிக வளாகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தி.நகர் பேருந்து நிலையம். குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையம், மேற்கு மாம்பலம் பகுதியில் மூத்த குடிமக்களுக்காக தனியார் உதவியுடன் இலவச மருத்துவ நிலையம் மற்றும் டயாலிசிஸ் மையம், சோம சுந்தரம், பாரதிநகர், ராஜாங்கம் மத்திய வீதி, ராஜா பிள்ளை தோட்டம் உள்ளிட்ட பகுதி வாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, புதூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி என பல்வேறு திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. வாக்காளர்கள் இன்முகத்துடன் வரவேற்கின்றனர்.எனவே, திமுக ஹாட்ரிக் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.