சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் மற்றும் பச்சை நிற வாக்குசாவடிகள்.

 
தமிழகம்

திருவள்ளூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு: 10 பசுமை வாக்குச்சாவடிகள்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் / மதுராந்தகம்: திருவள்ளூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 பசுமை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் செயல் முறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்  லட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்டர்சன் பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆவடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அயப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மதுரவாயல், தமிழ்நாடு அகில இந்திய சேவை வீட்டு வசதி சங்கம், ஆட்டந்தங்கல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமை வாக்குச் சாவடிகளில், 7,973 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கூரைப்பூச்சு பயன்பாடு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச் சாவடிகளின் உட்புற சுவர்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாட்டு சாணத்தால் ஆன பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடி கட்டிடத்தின் வெப்பத்தை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மற்றும் இன்ப்ராரெட் கதிர்களை பிரதிபலிக்கும் கூரைப்பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பசுமை வாக்குச் சாவடிகள் முயற்சி சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வாக்குப்பதிவு அனுபவத்தை வழங்கும்; பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்புணர்வை குடிமக்களாகிய வாக்காளர்களிடையே வளர்க்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதாப் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கை மாவட்டத்தில் உள்ள 7 பேரவை தொகுதிகளிலும், பெண்களுக்கான பிங் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பிங், பச்சை நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தொகுதி வாரியாக ஒரு மையம், பசுமை வாக்குச்சாவடி மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT