ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக திரண்டிருந்த கேரள வியாபாரிகள்.
பழநி: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.10 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்களில் ஒன்று. இங்கிருந்து தினமும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, 50 சதவீத காய்கறிகள் கேரளாவுக்குச் செல்கின்றன. 100-க்கும் மேற்பட்ட லாரிகள், சரக்கு வாகனங்களில் சராசரியாக 100 டன் காய்கறிகள் வரை விற்பனையாகிறது.
கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை (ஆக. 26) கொண்டாடப்படுகிறது. இதற்காக, கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து ஏராளமான லாரிகளில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் கடந்த 3 நாட்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் களைகட்டியது.
கேரள மக்கள் அதிகம் பயன்படுத்தும் பயறு வகைகள், பூசணிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ரூ.2.5 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது. கடந்த 3 நாட்களில் மொத்தம் ரூ.10 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: அண்மைக்காலமாக கேரளாவுக்கு ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரத்தில் கொள்முதல் செய்யும் அளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
அதேநேரம், எல்-நினோ பாதிப்பு காரணமாக நடப்பாண்டில் பல மாவட்டங்களில் காய்கறி சாகுபடி பாதிப்படைந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 70 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கடந்த ஆண்டைவிட அதிக லாபம் கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினர்.