தமிழகம்

தீபாவளிக்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு; சென்னையில் 18,000 காவலர்கள் கண்காணிப்பு

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் வணிகப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதிகொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

மேலும், பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சென்னையின் முக்கிய பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, எம்.சி. சாலை, ஜி.ஏ. சாலை, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கவும் சிறப்பு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 25 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 37 பைனாகுலர் கண்காணிப்பு குழுக்கள் மூலம் சந்தேக நபர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 12 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், 37 உதவி மையங்கள், 10 மினி சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக 205 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், ‘100’ உடலில் அணியும் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.நகர், பூக்கடை, திருவல்லிக்கேணி, கோயம்பேடு பகுதிகளில் 7 டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

பழைய குற்றவாளிகளை கண்டறிய முக அடையாளம் கண்டறியும் செயலி மூலம் 199 போலீஸ் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன. சாதாரண உடையிலும் ஆண், பெண் போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். ரோந்து வாகனங்கள், போக்குவரத்து மார்ஷல்கள் மூலமும் நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும், குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க மணிக்கட்டில் கட்டும் அடையாள பட்டைகளும், பெண்களின் தங்க நகைகளை பாதுகாக்க துணி கவசங்களும் வழங்கப்படுகின்றன. வணிக வளாகங்களில் நடமாடும் எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. பட்டாசு கடைகளிலும் தீயணைப்பு மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், தமிழகம் முழுவதும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரடி மேற்பார்வையில் 1 லட்சம் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்து, தகவல் அறிந்தால் அதுகுறித்து பொது மக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என டிஜிபி கேட்டுக் கொண்டுள்ளளார்.

2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுறுத்தி உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT