வாழ்வு இனிது

டைகரின் பாய்ச்சலுக்கு கிளாடிஸே காரணம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 10

டி.என் ரகு

ராஜரத்தினம், கிளாடிஸ் திருமணத்துக்கு மாப்பிள்ளை சரியான நேரத்துக்கு வந்து சேருவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்திருக்கிறது. “மும்பையில ஒரு போட்டியை முடிச்சுட்டு, கல்யாணத்துக்கு வருவதாக பிளான். அந்த நேரத்துல பிரதமர் இந்திரா காந்தி படுகொலை நடந்திடுச்சு. ரயில் எதுவும் ஓடல. எப்படியோ கூட்ஸ் வண்டில ஏறி, சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டு, கல்யாணத்தன்னிக்குக் காலைல ஊரு வந்து சேர்ந்தேன். அதே மாதிரி என் தங்கச்சி கல்யாணத்துக்கு முன்னாடியும் ஒரு மேட்ச் இருந்துச்சு. நான் போகும் போது தாலி கட்டிட்டாங்க. இப்படி வாழ்க்கையே கபடின்னு ஆயிடுச்சு” என்று சிரிக்கிறார் டைகர்.

1990 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ராஜரத்தினம் தேர்வான போது, அவர் ஐசிஎஃபில் வேலை பார்த்துவந்தார். நிலையான மத்திய அரசு வேலை என்றாலும், அளவான சம்பளம்தான். கபடியின் மூலம் வரும் வருமானம் சொற்பமே. அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளின் படிப்பு, வீட்டுச் செலவுக்குப் போதுமான வருமானம் மட்டுமே அப்போது ராஜரத்தினத்துக்கு வந்தது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக கபடி அறிமுகமானது. இந்திய அணியில் இடம்பெற கடும் போட்டி; கபடி ஜாம்பவனாக இருந்தாலும் ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் ராஜரத்தினத்தின் பெயர் உறுதி செய்யப்பட்டது. வியர்வை இல்லாத விளையாட்டுகூட இருக்கலாம், ஆனால் அரசியல் இல்லாத விளையாட்டு இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை.

பெய்ஜிங் போக வர, அங்கு தங்க எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துவிடும். ஆனால், கைச்செலவுக்கு ராஜரத்தினத்திடம் காசில்லை. தாய்க்குப் பின் தாரமாக ராஜரத்தினத்தின் கபடிப் பயணத்துக்குப் பக்க பலமாக இருந்த கிளாடிஸ் யோசித்தார். வழி கிடைத்துவிட்டது. “தாலியை அடகு வைத்து, என் கையில பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாங்க” என்று ராஜரத்தினம் நெகிழ்ச்சியோடு சொன்னார்.

அந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்தது ஒரே தங்கம். வாங்கிக் கொடுத்தது கபடி. ஹீரோவாக ராஜரத்தினம் தாயகம் திரும்பினார். கபடி தங்கத்தோடு தாலியும் திரும்பி வந்தது.

“நான் நாட்டுக்காக வாங்கிய தங்கப் பதக்கம் பத்தி அடகுக் கடைகாரருக்கும் தெரிந்திருந்தது. பிறகு அவர் நல்ல நண்பராகிவிட்டார். எனக்குப் புதுசா ஒரு மோதிரமே போட்டார்னா பார்த்துக்கோங்க” என்று வெடித்துச் சிரித்தார் ராஜரத்தினம்.

கபடியில் செயின் டேக்கிள் செய்ய இருவர் இணைந்து செயல்பட வேண்டும். வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள ராஜரத்தினத்துடன் எப்போதும் கைகோத்தவர் கிளாடிஸ். “எனக்கு இருபத்தி நாலு வயசில திருமணம் ஆனது; அதுவரை எனக்கு எல்லாம் என் அம்மாதான்.

திருமணத்துக்குப் பிறகு எல்லாம் என் மனைவிதான். நான் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு இரண்டு பேரும் நினைச்சாங்க! கிளாடிஸ் எப்போதும் என் பின்னாடி நூறு சதவீதம் இருப்பாங்க. அவங்களுக்கும் கபடி தெரிந்தது பெரிய பிளஸ். அம்மாவோட பாசம், காதலியின் அன்பு, நண்பனின் ஆலோசனை அவங்ககிட்டேயிருந்து கிடைச்சுக்கிட்டே இருக்கு.

நான் இரண்டு ஏசியன் கேம்ஸ் விளையாடுவதற்கான ஃபிட்னஸ், டிசிப்ளின் இருந்ததுன்னா அதுக்குக் காரணம் என் மனைவிதான். நான் காலை நாலரை மணிக்கு பிராக்டீஸுக்கு எழுந்தா, அவங்க மூணரை மணிக்கு எழுந்து சூப் போட்டு வச்சிருப்பாங்க!” என்று உணர்வுபூர்வமாகச் சொன்னார் ராஜரத்தினம்.

அரசுப் போக்குவரத்துக் கழக வேலையைக் குடும்பத்துக்காக கிளாடிஸ் விட்டதைப் பெரிய தியாகம் என்கிறார் ராஜரத்தினம். “கடைசியா சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகத்துல வேலை பார்த்தாங்க. வேலையில தொடர்ந்திருந்தா அவங்க திறமைக்கு எங்கேயோ போயிருப்பாங்க.

நான் அதிகமா படிக்காததால என்னோட ரெண்டு பொண்ணுங்களும் நல்லாப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். என் மனைவியோட வழிகாட்டுதலில் அது நடந்தது. ரெண்டு பேரும் கபடியும் சிறப்பா, ஆத்மார்த்தமாக விளையாண்டாங்க என்பதில் எனக்குப் பெருமை” என்கிறார் ராஜரத்தினம்.

கிளாடிஸ் வேலையை விடுவதற்கு முன், ராஜரத்தினம் இன்னொரு திட்டத்தையும் அவரிடம் சொல்லியிருக்கிறார்.

“ரெண்டு பேரும் வேலைக்குப் போனா குழந்தைகளைப் பார்த்துக்க முடியாது. நீ நல்லாப் படிச்சிருக்க; அதனால நீ தொடர்ந்து வேலை பாரு. நான் வேலையை ராஜினாமா செஞ்சிடுறேன். நான் ரிக்க்ஷா, ஆட்டோ எல்லாம் ஓட்டிகூடச் சம்பாதிப்பேன். பிரைவேட்டா கபடி விளையாடினா கொஞ்சம் பணம் கிடைக்கும் அப்படின்னு சொன்னேன். அவங்க கேட்கல.

“1990, 1994 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் ஜெயிச்ச பிறகு, கலைஞரையும் ஜெயலலிதா அம்மாவையும் பார்க்கப் போனபோது இரண்டு பேரும் என் மனைவி வேலைக்குப் போவதாக இருந்தா உதவி செய்வதாகச் சொன்னாங்க. நாங்க வேணாம்னு முடிவு பண்ணிட்டோம்.”

ராஜரத்தினத்தின் ஒன்றுவிட்ட அக்கா மகனும், கபடிப் பயிற்சியாளருமான ரவிச்சந்திரன் ரத்தினச் சுருக்கமாக சொன்னார்: “மாமி இல்லையென்றால் மாமா இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது.”

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT