வாழ்வு இனிது

அவர் பெயரே வரலாறுதான்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 21

டி.என் ரகு

‘ஒரு பேரே வரலாறு’ என்கிற வாக்கியம் 2026ஆம் ஆண்டு மே நான்காம் தேதிக்குப் பிறகு பிரபலமானது. மூன்று தசாப்தங்களுக்கு முன் ராஜரத்தினம் கபடியில் உச்சத்தில் இருந்த போது அவர் பெயரும் வரலாறுதான்! “எங்க போனாலும் அவர் ஸ்டார்தான். பெஸ்ட் பிளேயர், பெஸ்ட் கோச், பெஸ்ட் டீம் பிளேயர் எல்லாம் அவருதான். எல்லாத்தையும்விட பெஸ்ட் அப்பாவும் அவர்தான்!” என்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் ராஜரத்தினத்தின் இரண்டாவது மகள் ஜீவிதா.

“தூத்துக்குடியில் நடந்த ஒரு ஸ்டேட் சாம்பியன்ஷிப்பில் என்னோட அக்கா நிவேதா ஜுனியர் செக்க்ஷனில் ஆடுவதைப் பார்க்க அம்மாவும் நானும் போயிருந்தோம். விளையாடுவதை நிறுத்தியிருந்த அப்பாவும் வந்திருந்தார். மின்சார அணி டீம் கோச் ஜெயபால் மாமா, அப்பாவைத் திடீர்னு விளையாடக் கூப்பிட்டார். அப்பாவும் ரெடின்னு சொல்லி இறங்கிட்டாரு. அப்பா விளையாடப் போறார்னு தெரிஞ்சு கூட்டம் கூடிடுச்சு. கிட்டத்தட்ட நாற்பது வயதில் அவர் மின்னல் வேகத்தில் செஞ்ச டேக்கிளை மறக்கவே மாட்டேன்!

நல்லா விளையாடியது மட்டுமல்லாமல் ஆடியன்ஸ் சந்தோஷத்திற்காகவும் விளையாடுவார். உட்கார்ந்து ரைடு செய்தால் ரசிகர்களுக்குப் புடிக்கும்னு அதையும் அப்பப்ப செய்வாரு. மூளையைப் பயன்படுத்தி கபடி ஆடுவாரு. எதிராளியோட கண்ணைப் பார்த்தே, அவங்க என்ன செய்யப் போறாங்க என்பதைக் கணிச்சுடுவாரு.

அவங்க பிரெயினை ஊடுருவி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிப்பாரோன்னு தோணும். பவர், ஸ்பீடைத் தாண்டி எங்கப்பா ஒரு திங்கிங் கபடி பிளேயர் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமை. கபடி அவருக்கு அவ்வளவு புடிக்கும். கபடி இல்லைனா என் வாழ்க்கையே இல்லை, மக்களே என்பார்” என்கிறார் ஜீவிதா.

ஒரு தரமான கபடி வீராங்கனையான ஜீவிதா, இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். பீச் கபடியிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தார்.

“கபடி என் ரத்தத்திலேயே ஊறுனது; உணர்வோட கலந்தது. அப்பா கபடிதான் விளையாடணும்னு கட்டாயப் படுத்தல; ஆனா ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடணும்னு சொல்லுவாரு. வேற, வேற விளையாட்டுகளை விளையாட வைப்பாரு. சின்ன வயசுல கராத்தே கத்துக்கிட்டது பின்னாடி கபடியில் ரன்னிங் கிக் செய்ய உதவியா இருந்தது.”

தந்தை ராஜரத்தினத்துடன் ஜீவிதா

சிறு வயதில் தூங்கி எழுந்தவுடனே ஜீவிதா முதலில் பார்ப்பது ராஜரத்தினத்தின் உடற்பயிற்சியைத்தான். “பாட்டைக் கேட்டுக் கொண்டே எக்ஸர்சைஸ் செய்வார். என்னை அவர் மேல உட்காரச் சொல்லி புஷ்அப்ஸ் செய்வார். இப்ப அமெரிக்காவிலிருந்து லீவுக்கு வந்தாலும், விடியற்காலையில், மக்களே பிராக்டீஸுக்குப் போகலாம் என்று எழுப்புவார்.

அவரோட ஃபிட்னஸ் ரொட்டினை அமெரிக்கா வந்தாலும் கடைப்பிடிப்பார். அம்மாவும் யூனிவர்சிட்டி லெவல் அத்லெட். ஸ்கூலில் நான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கும் போது, அம்மாவும் கூடவே ஓடிவருவாங்க. விளையாட்டு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பார்ட் ஆனதற்கு அப்பாவும் அம்மாவும்தான் காரணம்” என்று நினைவுகளில் மூழ்கினார் ஜீவிதா.

பெற்றோர் இருவரும் விளையாட்டு வீரர்களாக இருந்தது தன் கபடி வாழ்க்கைக்குப் பெரிய உதவியாக இருந்தது என்கிறார் ஜீவிதா. “கபடி விளையாடும்போது பெரிய அடி பட்டா அம்மாவும் அப்பாவும் பதற மாட்டாங்க. அடுத்தது என்ன செய்ய வேணும்னுதான் யோசிப்பாங்க. என்னோட உதடு கிழிந்து ரத்தம் கொட்டியபோதும், பீச் கபடி விளையாடும்போது முதுகெலும்பில் அடிபட்டு நான் அரை மணி நேரம் நினைவு இல்லாமல் இருந்தபோதும் அவங்க பயப்படாம இருந்ததும், தொடர்ந்து விளையாட என்கரேஜ் செய்ததும் நான் இந்தியாவுக்காக விளையாட உந்துசக்தியா இருந்துச்சு.

அப்பாவோட ஓவரால் கேம் பிடிக்கும் என்றாலும், ரைடராக அவர் டேக்கிள் செய்ய வரும் எதிரணி வீரரின் நெஞ்சில், கழுத்தில் கை வைத்துத் தப்பிக்கும் விதம் பிடிக்கும். டிவிஸ்ட் செஞ்சு ஆங்கிளை ரிலீஸ் செய்யற விதமும் சூப்பரா இருக்கும். அப்புறம் எல்லாருக்கும் புடிச்ச ஜம்ப். செயின்ல புடிக்க வர்றவங்களைத் தாண்டி அசால்ட்டா சென்டர் லைனைத் தொடுவாரு. கபடியில புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்க தயங்கவே மாட்டாரு. ஜுனியர்ஸ் கிட்ட இருந்தும் கத்துப்பாரு. He is a great learner” என்கிறார்

ராஜரத்தினம் கபடி விளையாடப் பிறந்தவர் என்று சுருக்கிவிட முடியாது என்கிறார் ஜீவிதா. “விளையாட்டிற்காகப் பிறந்தவர் என்று சொல்லலாம். கபடி இல்லையென்றால் வேறு ஏதாவது விளையாட்டில் சாம்பியன் ஆகியிருப்பார். இப்ப கணபதிபுரத்தில் உள்ள எங்க வீட்டுக்குப் போனா எப்போதும் ஸ்போர்ட்ஸ் சேனல்தான் டிவில ஓடிக்கிட்டு இருக்கும்.”

அமெரிக்காவில் வசிப்பதால் பல்வேறு வகையான விளையாட்டுச் சாதனையாளர்களைப் பார்த்திருப்பார் ஜீவிதா. இப்போதுள்ள விளையாட்டு வீரர் யாருடனாவது ராஜரத்தினத்தை ஒப்பிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்று சட்டென்று சொல்கிறார். ”He is incomparable.”

மகள்கள், மருமகன்களுடன் ராஜரத்தினம் தம்பதி

தான் அதிகம் படிக்காததால், பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்று விரும்பிய ராஜரத்தினமும், நன்கு படித்திருந்ததால் படிப்பின் அருமை தெரிந்திருந்த கிளாடிஸ் ராஜரத்தினமும் ஜீவிதா கல்வியிலும் சிறக்கத் தூண்டுதலாக இருந்துள்ளனர். பொறியியல் பட்டப் படிப்பில் யூனிவர்சிட்டி முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற ஜீவிதா, தற்சமயம் வடக்கு ஃபுளோரிடா தமிழ்ச் சங்கத் தலைவராக உள்ளார்.

விளையாட்டைத் தாண்டி வாழ்க்கைப் பாடங்களையும் அப்பாவிடமிருந்து கற்றுள்ளார் ஜீவிதா. “எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் செய்யணும் என்பதில் ஸ்ட்ராங்கா இருப்பாரு. எல்லாரும் நல்லா சாப்பிடணும்னு ஆசைப்படுவாரு. வாழ்க்கையில் எதுவும் ஈசியா கிடைச்சிடாது. I have to earn it through my work என்பதை அவரிடமே கற்றுக் கொண்டேன்” என்கிறார் கபடி, படிப்பு இரண்டிலும் ராஜரத்தினத்திற்குப் பெருமை சேர்த்த அவருடைய இரண்டாவது மகள்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். தொடர்புக்கு: tnrags@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT