எழுதத் தொடங்குவதற்கு முன்பு இந்தத் தொடருக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது பற்றி ஒரு விநாடிகூட யோசிக்கவில்லை. ராஜரத்தினம் ஆடிய கபடியைப் பார்த்தவர்கள் எல்லாம் அவரை ‘டைகர் ராஜரத்தினம்’ என்றே அழைப்பதால், வேறு தலைப்பைப் பற்றி சிந்திக்கவே இல்லை. காட்டிலுள்ள புலியைப் பாதுகாக்க ஒரு பேரியக்கம் தேவைப்பட்டது; ஆனால், கபடிக் களத்தில் அதகளம் செய்த வேங்கையை ரசிகர்களும் வீரர்களும் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.
ராஜரத்தினம் எப்படி டைகர் ஆனார்?
திருநெல்வேலி மாவட்டம்தான் ராஜரத்தினத்திற்கு டைகர் என்கிற அடைமொழியைத் தந்ததாகச் சொல்கிறார்கள். முன்னாள் தமிழ்நாடு வீரரான சண்முகசுந்தரம், திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்கு அருகில் 80களில் வழக்கமாக நடக்கும் A கிரேடு போட்டியில்தான் முதன்முதலில் ‘டைகர்’ என்று அழைக்கப்பட்டார் என்கிறார்.
“ஆர்தர் ராஜாங்கிற வர்ணனையாளர்தான் ராஜரத்தினத்தைப் பாயும் புலின்னு கூப்பிட்டார். அப்ப ராஜரத்தினம் அண்ணன் மின்சார வாரிய அணிக்கு ஆடிட்டு இருந்தாரு. உண்மையிலே பீக்ல இருக்கும்போது ஆட்டு மந்தைக்குள்ள போகிற வேங்கை மாதிரிதான் ரைடு போவாரு.”
பெங்களூருவைச் சேர்ந்த, அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய வீரரான பி.சி. ரமேஷ், ராஜரத்தினம் விளையாடிய கபடியைப் பற்றி பேசும்போது புல்லரிக்கிறது என்கிறார்.
“ராஜரத்தினம் ஒரு டைகர் மாதிரி. காட்டில் புலி எப்படி வேட்டையாடப் பாயுமோ, அதே மாதிரி அவர் கபடி விளையாடினார். அவரைப் பார்த்து இந்தியாவே பயப்படும். அதை நான் என் கண்ணாலே பார்த்திருக்கேன். அவருக்கு முன்னாடி நாங்கெல்லாம் ஒண்ணுமே இல்லை. ராஜரத்தினம், பல்விந்தர் எல்லாம் லெஜெண்ட்ஸ்.”
ராஜரத்தினத்தின் கபடி சாதனைகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ள நாஞ்சில் செல்லப்பா என்பவர், டைகர் போல வேறு யாரும் இல்லை என்கிறார்.
‘ஆயிரம் மனிதர் பிறப்பார் இறப்பார்
பாயும் புலி ராஜரத்தினம்போல்
பார் புகழ கபடியில் யார் வருவார்!’
தமிழ்நாடு மின்சார வாரிய அணியில் ராஜரத்தினம் சேர்ந்த போது அவருக்கு கேப்டனாக இருந்த ஜெயபாலன், அந்த இளைஞனைக் களத்தில் பார்க்கும்போது புலியைப் பார்ப்பது மாதிரியே இருக்கும் என்கிறார். “அந்த மாதிரி பாய்ச்சல், ஆக்ரோஷம் அவரோட ஆட்டத்துல இருக்கும். போகப் போக அவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பார்ப்பது போல இருக்கும்.”
ராஜரத்தினத்துடன் ஐசிஎஃப், தமிழ்நாடு அணிகளில் விளையாடியுள்ள சேலம் சாமியப்பன், டைகர் என்கிற பெயருக்கு அவர் பொருத்தமானவர் என்கிறார்.
“நான் பக்கத்துல இருந்து பார்த்திருப்பதால் சொல்றேன். அவரு புலி மாதிரிதான் விளையாடுவாரு. அந்தப் புலி என்னைப் பார்த்து, நரின்னு சொல்லும்” என்று சிரிக்கிறார். “சில சமயங்களில் அவரை நான் பிசாசுன்னு கூப்பிடுவேன்; எங்கேயிருந்து வருவாருன்னு சொல்ல முடியாது; அவர் அடிக்கும் அடி அந்த மாதிரி இருக்கும்!”
ராஜரத்தினம் எப்படி புலியானார் என்பதற்கு ஒரு போட்டியின் போது எடுக்கப்பட்ட ஓளிப்படமே சாட்சி. ஒரு ரைடர் ராஜரத்தினத்தின் அணிக்கு எதிராக லெஃப்ட் கார்னர் பக்கம் செல்கிறார்; ரைட் ஆர்ச்சில் இருக்கும் ராஜரத்தினம் தனி ஆளாக டேக்கிள் செய்ய வெறியுடன் ஓடிவருகிறார். ரைடருக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்து, அவரது உடல் மொழியில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. காட்டில் புலிக்கு முன் மாட்டிய மானின் மிரட்சி அந்த ரைடரின் கண்களில் பிரதிபலித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் நடத்தி வரும் கபடி பயிற்சி மையத்தில் அந்த ஒளிப்படத்தை மாட்டி வைத்துள்ளார் ராஜரத்தினத்தின் உறவினரான ரவிச்சந்திரன். “ராஜரத்தினம் கபடி எப்படி விளையாடினாருன்னு பிற்காலச் சந்ததிகளுக்குச் சொல்ல வீடியோக்கள் இல்லை; ஆனால் இந்த ஒரு படம் போதும்” என்கிறார் முன்னாள் தமிழ்நாடு வீரரான ரவிச்சந்திரன்.
மகாராஷ்டிரமின் புனே, நாக்பூர், வார்தா, யாவத்மால் போன்ற இடங்களில் ராஜரத்தினத்தை டைகர், டைகர் என்று கொண்டாடுவார்களாம். இந்திய கபடி வரலாற்றில் தலைசிறந்த ரைடர் என்று பலரால் போற்றப்படும் பல்விந்தர் சிங் ஃபிட்டாவும் ராஜரத்தினத்தை எங்கு சந்தித்தாலும் டைகர் ராஜா என்று ஆரத் தழுவுவாராம்.
ராஜரத்தினத்தின் கபடியை அணுக்கமாகப் பார்த்து வளர்ந்த கோல்ட் ராஜேந்திரன், புலிப் பெயருக்கு ஒரு காரணம் சொன்னார். “ரைடரைப் பிடிக்கும்போது தலையைத்தான் அடிப்பார். கழுத்தையும் பதம் பார்ப்பார். அப்ப டைகர்னுதான சொல்லுவாங்க!”
இந்திய அணியைத் தேர்வு செய்யும் முகாமில் பல வீரர்கள் ராஜரத்தினத்திடம் கொஞ்சம் பார்த்து அடிங்கன்னு சொல்வாங்களாம். “நீதான் நிச்சயம் செலக்ட் ஆகப் போற. எதுக்கு எங்களை இந்த அடி அடிக்கணும். நாங்க இந்தியாவுக்கு ஆட வேணாமான்னு கேட்பாங்க,” என்று சிரிக்கிறார் ராஜரத்தினம்.
‘டைகர்’ என்கிற அடைமொழி ராஜரத்தினத்துக்கு நெருக்கமானது. அவரது இடது கையில் புலியைப் பச்சைக் குத்தியுள்ளார். ஐசிஎஃப்இல் வேலை பார்க்கும்போது வாங்கிய புல்லட்டில் புலி ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார். கணபதிபுரத்தில் ராஜரத்தினத்தின் வீட்டைத் தேடுபவர்களுக்கு உதவி செய்வது போல அவரது பக்கத்து வீட்டுச் சுவரில் ஓர் அற்புதமான புலி ஓவியம் வரையப்பட்டுள்ளது. புலியே புலியின் வீட்டுக்கு வழிகாட்டி!
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். தொடர்புக்கு: tnrags@gmail.com