'டைகர்' ராஜரத்தினம் அவருடைய இரண்டு ஆசிய விளையாட்டுப்போட்டி தங்கப் பதக்கங்களுடன்

 
வாழ்வு இனிது

மண்ணின் மைந்தர் | ’டைகர்’ ராஜரத்தினம் 1

டி.என் ரகு

ராஜரத்தினம் கபடி விளையாடவே பிறந்தவர். ஆனால் இயற்கையின் கருணையால்தான் அவர் உயிரோடு இருந்திருக்கிறார். புகழ்பெற்ற கபடி வீரராகவும் உருவாகியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் இறந்தவர்களைப் புதைக்க சவக்குழி வெட்டும் வழக்கம் கன்னியாகுமரியில் உண்டு. அந்த வேலையைப் பெரியவர்களே செய்வார்கள். படிப்பில் ஆர்வம் இல்லாத பள்ளி மாணவரான ராஜரத்தினம், ஒரு சடலத்தைப் புதைப்பதற்காக அவருடைய சொந்த ஊரான கணபதிபுரத்தில் தானே களத்தில் இறங்கினார்.

குழிக்குள் இறங்கி மண்ணை வெட்ட ஆரம்பித்தார். அது மழைக்காலம். மண் நெகிழ்ந்திருந்தது. அதில் பக்கத்தில் இருந்த வீட்டின் மண்சுவர் தோண்டப்பட்ட குழி மீது அப்படியே சரிந்தது. அரும்பு மீசை துளிர்விடும் பதினேழு வயது ராஜரத்தினம் ஆறடி ஆழமுள்ள குழிக்குள்ளே இருந்தார். கூடியிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றப் போராடினர். நேரம் கடந்துகொண்டிருந்தது. சாகச எண்ணம் நிரம்பிய ஒரு சிறுவனின் மரணம் இப்படி மண்ணால்தானா நிகழவேண்டும் என்று அரற்றிக் கொண்டிருந்தனர்.

உள்ளே இருப்பது ஓருயிர் என்பதால் பதற்றத்தில் இருந்த கூட்டம் சரிந்த மண்ணைக் கவனமாக வெட்ட வேண்டும் என்று முடிவெடுத்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து விட்டது. இனி உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருந்தது. ஆனால், உயிரோடு மீட்கப்பட்டார் ராஜரத்தினம்! கூடியிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.

ராஜரத்தினத்தின் ஒன்றுவிட்ட அக்கா மகனும் முன்னாள் தமிழ்நாடு கபடி வீரருமான ரவிச்சந்திரன், ராஜரத்தினம் அன்று பிழைத்தது அதிசயம்தான் என்கிறார். “சவக்குழி ஆறடிக்கு வெட்டுவார்கள். இப்ப மாதிரி அப்படியே நேராக உடலை வைக்க மாட்டார்கள். தோண்டிய குழியில் உடலை வைக்க அடுக்கு மாதிரி வைத்து, கீழே குடைவார்கள்.

ஆறடி மண்ணும் அவர் மேல் சரியும்போது, ராஜரத்தினம் அந்த அடுக்குக்குக் கீழே இருந்தார். பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் அனைவரும் நினைத்தனர். அவர் உயிருடன் வெளியே வந்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடந்ததைப் பலரால் நம்ப முடியவில்லை” என்றார் ரவிச்சந்திரன். இவர் தற்போது கணபதிபுரத்திற்கு அருகிலுள்ள ஆலத்தங்கரையில் கட்டணமில்லாத கபடி பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்.

ராஜரத்தினத்திடம் அந்த மறுபிறப்பு குறித்துக் கேட்டபோது, ஒரு சிரிப்புடன் ஆரம்பித்தார்.

“என்னை வெளியே இழுத்தவங்களைக் கேட்டா இன்னும் விரிவாகச் சொல்லுவாங்க. எனக்கு நான் உள்ளே விழுந்தது தெரியும். எப்படிப் போராடி வெளியே இழுத்தாங்கன்னு தெரியாது. மேலே வந்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அந்த வயசுல ரொம்பத் துருதுருன்னு வேகமா எதையும் செய்வேன். அதனால தைரியமா களத்தில் இறங்கி விட்டேன்.

கூடியிருந்தவர்கள் என் கதை முடிந்துவிட்டது என்று முடிவு செய்து, இன்னொரு குழி வெட்டி அந்த முதல் பிணத்தைப் புதைக்கலாம் என்று பேச ஆரம்பித்து விட்டார்களாம். என்னோட உறவுகாரங்கதான் ராஜரத்தினம் சடலத்தை வெளியே எடுத்தே ஆகணும்னு சொல்லி தோண்டியிருக்காங்க. அதனால்தான் உயிரோடு இருக்கேன்” என்று பெருமூச்சு விட்டார் ராஜரத்தினம்.

சில நிமிடங்கள் மெளனத்துக்குப் பிறகு, “கபடியில ஏதோ சாதனை செய்ய வேண்டும் என்றுதான் உயிர்ப் பிழைத்தேன் என்று நினைக்கிறேன். அந்தச் சம்பவத்தை இப்ப நினைத்தால்கூடத் தூக்கம் வராது. ஆனால், சாவையே பார்த்துவிட்டதால, பயம் போய்விட்டது. பயம் இருந்தால் கபடி விளையாட முடியாதே” என்று சிரித்தார் ராஜரத்தினம்.

அன்று மண்ணோடு போயிருக்க வேண்டிய ராஜரத்தினம், அவருடைய தாய்மண்ணுக்கு இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்தார்! கபடி விளையாட்டில் தன்னிகரில்லாத வீரராக ஜொலித்தார். கபடியில் அர்ஜுனா விருது பெற்ற முதல் தென்னிந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ராஜரத்தினம் விளையாடுவதை நிறுத்தி ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆனாலும், அவருடைய கபடி இன்றும் பேசப்படுகிறது. கிரிக்கெட்டுக்கு ஒரு சச்சின் டெண்டுல்கர், செஸ்ஸுக்கு ஒரு விஸ்வநாதன் ஆனந்த், கபடிக்கு ஒரு ராஜரத்தினம். வெறும் ராஜரத்தினம் இல்லை; ‘டைகர்’ ராஜரத்தினம். பசி கொண்ட புலி, மான் மீது பாய்வதைப் போல், எதிரணி வீரர் மீது பாய்ந்து புள்ளிகள் எடுக்கும் ஸ்டைல் காரணமாக ‘டைகர்’ என்கிற அடைமொழி ராஜரத்தினத்துடன் ஒட்டிக்கொண்டது.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். | தொடர்புக்கு: tnrags@gmail.com

SCROLL FOR NEXT