லார்டு பிக்கட்டு எனும் கவர்னர் சென்னைப்பட்டணத்துத் துறைமுகத்தில் பொ.ஆ. (கி.பி.) 1775ஆம் ஆண்டு மன்மத வருஷத்தில் வந்திறங்கிய வரலாற்றை, சுதேசமித்திரன் பத்திரிகை 137 ஆண்டுகளுக்குப் பின்னர் விவரித்தது மட்டுமல்லாமல் கவர்னருக்கு நல்வரவு கூறிப் பாடிய சோபனப் பாடலைத் தனது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
அந்தக் காலத்தில் அதிவிருஷ்டி (அதிக மழை), அநாவிருஷ்டி (பஞ்சம்) என்னும் சங்கடங்களால் பயிர்கள் பாழாகிப் போய் அடிக்கடி அரிசி கிடைக்காத கோரமான பஞ்சம் நேரிடுவதும், அப்போது கோபாலபுரம் முதல் தேவனாம்பட்டணம் வரையில் இத் தேசத்து விளைபொருள்களைப் பெரிய படகில் ஏற்றிப்போவது வழக்கமாம்.
அப்போது அகவிலையைச் சரிப்படுத்த துரைத்தனத்தார் பிரவேசித்து, வர்த்தகர்களுக்குக் கட்டளையிடுவது வழக்கமாக இருந்ததாகவும் இவ்வகையான காரியங்களைப் பற்றி அச்சோபனத்தில் பெண்கள் கூறியுள்ளது விநோத மாயிருக்கும் என்கிற அறிமுகத்துடன் சோபனம் பிரசுரமாகி இருக்கிறது.
லார்டு பிக்கட்டு இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய நல்வரவை 16 அடிகளில் வர்ணித்திருப்பதைக் காண முடிகிறது. சாதாரணமாக சோபனம் (மங்கல வாழ்த்து) என்பது வரவேற்கும் விதமாகப் பாடப்படுவது என்றாலும், விசேஷமாகப் பூசனை செய்யும் தெய்வங்களைப் போற்றிப் பாடப்பட்டு வரு வது மட்டுமல்லாமல் வேறுவிதமாகவும் பயன்படுத் தப்பட்டு வந்திருக்கிறது.
பெ.ஆறுமுக முதலியா ரால் சென்னை முரஹரி அச்சுக்கூடத்தில் 1921இல் பதிப்பிக்கப்பட்ட மயூரநாத சோபனத்தில் நகைக் கடைக்கு விளம்பரமாகவும் சோபனத்தின் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது.
கிறித்துவ சோபனம்
இத்தருணத்தில் இன்றும் கிறித்துவத் திருச்சபைகளில் பாடிவரக்கூடிய மற்றொரு சோபனப் பாடலை அறிவது ஆச்சரியமளிக்கக்கூடும். 1800இன் மத்தியக் காலத்தில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சுவி சேஷ உபதேசியாகத் திகழ்ந்த வேதநாயகம் சாஸ்திரியாரின் சோபனம் சாதாரணப் பேச்சு மொழியில் அமைந்துள்ளது.
சோபனமே சோபனமே / சோபனப் பெண்காள் சோபனமே / தீப ஞான ஸ்நான பிரதாப / தேவதை பெண்காள் சோபனமே / சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம் / தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம் / எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம் / இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம் அந்தாதி, கும்மி, ஏற்றப்பாட்டு, குறவஞ்சி போன்ற பல்வகைப் பாடல் வடிவங்களை மட்டுமன்றி நாடகங் களையும் பூசனைக்கு ஏற்றவகையில் எழுதிப் பயன்படுத்திய வேதநாயகம் சாஸ்திரியார், சென்னப்பட்டணப் பிரவேசம் எனும் நாடகமொன்றையும் எழுதி இதே சென்னப்பட்டணத்தில் அரங்கேற்றியிருக்கிறார்.
பஞ்ச காலத்தில் பட்டணம் வந்திறங் கிய பிக்கட்டு உடனே நிவாரண நடவடிக் கைகளில் இறங்கிய செய்தியே இச்சோபனத்தில் முதன்மையாகக் கூறப்பட்டுள்ளது. அன்றைய நாள் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசு மேற்கொள்ளவில்லை.
கம்பெனியின் சார்பாக ஃபாக்டரி என்று அழைக்கப்பட்டு வந்த வர்த்தக ஸ்தாபனத்தையும், அதையொட்டிய பகுதி களையும் நிர்வகித்து வந்தவர் பிரசி டெண்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். பின்னாளில் குறிப்பாக, வந்தவாசிப் போருக்குப் பின்னரே நிர்வாக எல்லைகள் விரிவடைந்து மதராஸ் மாகாணம் உருவாகி, நிர்வாகிகள் கவர்னர்கள் ஆனார்கள்.
சோபனத்தில் மகாராஜனாகப் புகழ்ந் துரைக்கப்பட்ட ஜார்ஜ் பிகாட் (George Pigot) 1755 ஜனவரி 14 - 1763 நவம்பர் 14 வரை பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி யில் பிரசிடெண்ட் ஆக நிர்வாகம் செய்தி ருக்கிறார். 1755 ஜனவரிக்கு ஈடான தமிழ் ஆண்டு என்பது பவ. இதே பிகாட் 1775 டிசம்பர் 11 - 1776 ஆகஸ்ட் 23 வரை இரண்டாவது முறையும் பிரசிடெண்ட் ஆக இருந்திருக்கிறார்.
1775 டிசம்பருக்கு ஈடான தமிழ் ஆண்டுதான் மன்மத. சோபனத்தில் முதன்முறையாக 1755இல் நிர்வாகம் செய்தமை கூறப்படாது, கிட்டத்தட்ட இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறை நிர்வகித்ததுதான் பாடப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே 22 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னப்பட்டணத்துக்கு வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்தவர்தான் இந்த பிக்கட்டு என்பது சோபனத்தை எழுதியதாகச் சொல்லப்படும் வடிவேலு வுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இதில் இன்னோர் அம்சம் இதே மாதிரியான ஏராளமான சோபனங் களைக் குஜிலி பதிப்பாளர்கள் பதிப் பித்து வந்திருப்பதால், பிகாட்டுக் காகப் பிரத்யேக மாக எழுதிய சோபனமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.
சோபனங்கள், ஒப்பாரிப் பாடல்கள், சிந்துகள் போன்றவற்றைக் குஜிலி பதிப்பாளர்கள் 18ஆம்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் ஏராளமாகப் பதிப்பிக்கத் தொடங்கியுள் ளனர். எனவே, பிகாட் ராஜ்ஜிய பரிபாலனம் செய்த காலத்திலேயே எழுதிய தாகவும் தெரியவில்லை.
சொல்லப்போனால் 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலோ அல்லது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கக்கட்டத்திலோ பிகாட்டுக் கான சோபனம் எழுதப்பட்டி ருக்கலாம். எப்படி இருந் தாலும் பிரித்தானிய பிரபுவுக்கும் சோபனம் பாடியபெருமையை சென்னப் பட்டணவாசிகளாகிய நாம் கொண்டிருக்கிறோம்!
மாறுபட்ட சோபனம்
வழக்கமான இத்தகைய சோபனங்களிலிருந்து மாறுபட்ட தாகவே பிக்கட்டு சோபனம் அமைந்திருக்கிறது. முத்துக் கப்பல் பவழக் கப்பல் / முன்னாலே யொரு தங்கக் கப்பல் / ரத்தினக் கப்பல் வைடூரியக் கப்பல் / நேத்தியான பச்சைக் கப்பல் / கப்பல் வரும் அழகுகளை / கரையோரத்து மனுஷர்களை / சேர்ந்து வரும் அழகுகளை / சிரித்து நிற்கும் மனிதர்கள் / கப்பலிலே இருந்து பார்த்து / களித்து நின்றான் பிக்கட்டு / மகாராஜா பிக்கட்டு வரும் / பவனியை நாம் கேட்டு / மன்மத வருஷம் கார்த்திகை மாதம் / மகிழிரண்டாந் தேதி தன்னில் / மாட்சிமை தங்கிய பிக்கட்டு / வந்திறங்கினான் பட்டணத்தில் / பட்டணத்தில் வந்திறங்கி / பல சரக்கையும் விசாரித்து / அஃகம் குறையாமல் விற்கச் சொல்லி / யாவருக்கும் திட்டம் செய்தான் / மாற்றுக் குறையாமல் விற்கச் சொல்லி / மஹாராஜன் திட்டம் செய்தான் / திட்டம் பண்ணின பிற்பாடல்லவோ / சிந்தை மகிழ்ந்தே ஜனங்களெல்லாம் / தருமதுரை வந்தானென்று / சந்தோஷமாய் வாழ்த்தினார் / மஹாராஜன் வந்தானென்று / மகிழ்ந்து பாடினார் சோபனமே!
- கட்டுரையாளர், சென்னை வரலாறு குறித்த எழுத்தாளர்; veeorr52@gmail.com