

ஸ்ரீமுக வருடத்து மாசி மாதம். கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த வேளை. எங்கள் தோட்டத்துக் கிணற்றுமேட்டில் உயரமாக வளர்ந்திருந்த பிய்யன் மரத்தில் (பெருமரம்) புறாக்கூடுகளை அமைத்துப் புறாக்கள் வளர்க்கத் தீர்மானித்தேன்.
செங்காட்டூரில் மரத்தச்சு வேலை செய்யும் மாணிக்கம் தன் சகலையிடமிருந்து புறாக்குஞ்சுகள் வாங்கி வந்து தருவதாகச் சொல்லியிருந்தார். புறாக்கூடுகள் செய்வதற்காக தாராபுரம் பழ வியாபாரியிடம் இருந்து சாதிக்காய் பெட்டிகளையும் வாங்கி வந்து கிணற்றுமேட்டில் இறக்கினேன்.
மாணிக்கமும் புறாக்கூடுகள் செய்து பிய்யன் மரக்கிளையில் பொருத்துவதற்காகத் தச்சுச் சாமான்களுடன் வந்துவிட்டார். புறாக் கூட்டம் எங்கள் தோட்ட வெளியைச் சிறகடித்து வட்டமடிக்கும் ரம்மியமான மனச்சித்திரத்தைக் கண்டு கொண்டு நின்றிருந்தேன். அப்போது கிணற்றுமேட்டுக்கு வந்த அப்பா என் மனச்சித்திரத்தைக் குலைத்தபடியே சொன்னார்.
“புறாக்கள தோட்டத்துக்குள்ள வளர்க்க வேண்டாம்… புறா அணத்தற மாதிரி குடும்பமும் அணத்திக்கிட்டு போயிருமாம்…” என்னால் அப்பாவை எதிர்த்துப் பேச முடியவில்லை. மாணிக்கமும் வேலையைக் கைவிட்டுவிட்டுப் போய்விட்டார்.
பிய்யன் மரத்தை விற்பதாக அப்பா உடனே முடிவெடுத்து ஊருக்குள்ளும் தகவல் சொன்னார். வெயில் கொளுத்தித் தோட்டவெளி சூடேறிக் கிடந்த பின்மதியத்தில் நாகராஜ் அண்ணன் மர வியாபாரியைக் கிணற்றுமேட்டுக்கு அழைத்து வந்தார். மர வியாபாரி பிய்யன் மரத்தை நோட்டமிடும்போது நாகராஜ் அண்ணன் என்னிடம் சொன்னார்.
“பிய்யன் மரத்தை இழைக்கும்போது சுருள் சுருளாகப் பிய்ந்து போவதால இதுக்குப் பிய்யன் மரமுன்னு பேரு. தீப்பெட்டி அட்டையும் தீக்குச்சியும் செய்ய இந்த மரம்தான் கதி.”
பிய்யன் மரத்தை மரவியாபாரி சற்றுக் கூடுதல் விலை கொடுத்தே வாங்கினார். அப்பாவிடம் ஒரு வேண்டுகோளும் வைத்தார்: “மரத்தை வெட்டிக்கிட்டுப் போய் வித்துட்டு வந்து மொத்தப் பணத்தையும் தர்றேனுங்க…”
அப்பாவுக்கு அவர் மீது நம்பிக்கை வரவில்லை. நாகராஜ் அண்ணன் இடைபுகுந்து சொன்னார். “மர வியாபாரி நாவரசுக்காரர். உசிரே போனாலும் சொன்ன சொல்லு தவறமாட்டாரு.” அப்பா அரைமனதாகச் சம்மதித்தார். மர வியாபாரியும் போய்விட்டார். நான் நாகராஜ் அண்ணனிடம் கேட்டேன்.