‘செவன் சிஸ்டர்ஸ்’
அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்கள் ’ஏழு சகோதரிகள்’ எனப்படுகின்றன.
மலைத்தொடர்கள், மழை நனைத்த காடுகள், பழங்குடியினரின் வாழ்க்கை முறை, கிளர்ந்தெழும் உணவின் மணம் அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இந்தப் பெயர்.
அந்த ஏழு சகோதரிகளில் மேகாலயத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. ‘மேகங்களின் இல்லம்’ என்று பெயர்பெற்ற இந்த மண்ணில், மலைகளின் தோள்களில் மேகங்கள் சாய்ந்து உறங்குகின்றன!
சென்னையின் வெப்பத்திலிருந்து தப்பித்து மேகாலயத்தின் குளிர்ந்த காற்றை உணர்ந்த தருணம் அப்பப்பா!
குவஹாத்தி விமான நிலையத்திலிருந்து ஐந்து மணி நேர மலைப்பயணம். மலைச்சாலைகளில் ஏறத் தொடங்கியவுடன், வழியெங்கும் பசுமை. வானம் தரையைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோல அடர்ந்த மூடுபனி. இடையிடையே வெள்ளை நீர்த்தாரைகள் மலைக்குன்றுகளின் நடுவே விழுந்து கொண்டிருந்தன.
ஏழு நீர்த்தாரைகள்:
அன்று மாலை சிரபுஞ்சியை அடைந்தோம். மழை எங்களை உற்சாகமாக வரவேற்றது. உலகின் மிக ஈரமான இடம் என்று பெயர் பெற்றதாயிற்றே!
நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து ‘செவன் சிஸ்டர்ஸ்’ அருவியின் (Nohsngithiang Falls) அபாரமான அழகை முழுமையாகக் காண முடிந்தது. பசுமை போர்த்திய கரும் மலைகளின் மீது வெள்ளைப் பட்டுநூல் போல ஏழு நீர்த்தாரைகள் கீழே விழுந்து கொண்டிருந்தன. இடையிடையே மூடுபனி வந்து அந்தக் காட்சியை மறைத்து விளையாட்டுக் காட்டியது.
சித்ரா
ஏழு நீர்த்தாரைகளும் 315 மீட்டர் உயரத்திலிருந்து விழுகின்றன. அருகருகே பாய்ந்தாலும் அவை ஒன்றோடு மற்றொன்று கலப்பதில்லை. ஒவ்வொரு நீர்த்தாரை யும் தனித்த பாதையில் பயணிக்கிறது. அதைப் பார்த்த போது, ‘ஒற்றுமை என்பது ஒன்றாகக் கலந்து மறைந்து போவது அல்ல; தனித் தன்மையைக் காத்த படியே வாழ்வது’ என்கிற உண்மை புரிந்தது.
கதை சொல்லும் பாறைகள்:
அடுத்த நாள் வெய் சாவ்டோங் அருவிக்குச் செல்லும் பாதை சற்றுச் சவாலாக இருந்தது. ஈரமான மூங்கில் படிகளில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்க வேண்டியிருந்தது. சுமார் இருபது நிமிடங்கள் இறங்கிய பிறகே அந்த அருவி கண்ணுக்குப் புலப்பட்டது. மூன்று அடுக்குகளாகக் கண்ணாடி போலத் தெளிந்த நீர் விழுகிறது. இந்த அருவிக்குச் ‘சதுரக் குளம்’ என்று பெயர்.
டெய்ன்த்லென்
அங்கிருந்து டெய்ன்த்லென் அருவி நோக்கிச் சென்றோம். வழியெங்கும் காற்றில் ஈரப்பதம் வரவேற்றது. பாறை களின் மீது பாசி படர்ந்திருந்தது. இங்கு இயற்கை அழகோடு கதைகளும் வாழ்கின்றன. மனித பலி கேட்டு வாழ்ந்த ஒருபெரும் பாம்பையும், அதனை அழித்த வீரனையும் பற்றிய காசி மக்களின் புராணக்கதை இன்னும் அந்தப் பாறைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 90 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் நீர், கீழே உள்ள பாறைகளில் ஆயிரம் ஆண்டு களாக இயற்கைச் செதுக்கிய குழிகளை உருவாக்கியுள்ளது.
அடர்ந்த மூடுபனியை அறுத்துக்கொண்டு நோஹ்கலிகை அருவி நோக்கிச் சென்றோம். முதலில் மூடுபனி மட்டுமே தெரிந்தது. பின்னர் அந்த மூடுபனியைக் கிழித்துக்கொண்டு வெள்ளை நீரூற்று ஒன்று விழுந்துகொண்டிருந்தது. 340 மீட்டர் உயரத்திலிருந்து நேராக விழும் இந்தியாவின் உயரமான அருவிகளில் இதுவும் ஒன்று. அருகிலிருந்த கடைகளில் ஆரஞ்சுப் பழத் தேன், பட்டை, காட்டு மிளகு, அன்னாசிப் பழங்களை வாங்கினோம்.
வேர்ப் பாலம்
அடுத்த நாள்தான் எங்களின் மனோதிடத்திற்கான சோதனை தொடங்கியது. இரட்டை அடுக்கு வேர்ப் பாலம் (Umshiang Double-Decker Root Bridge) செல்லும் நடைப்பயணம். இதற்கு 3,500 படிகள் இறங்க வேண்டும். தொடக்கத்தில் உற்சாக மாகத் தோன்றிய பாதை, சில நூறு படி களுக்குப் பிறகு முழங்கால்களிடம் கெஞ்சத் தொடங்கியது. செங்குத்தான படிகள், சுற்றிலும் அடர்ந்த காடு, இடையிடையே சிறிய நதிகள், பறவைகளின் சத்தம், தூரத்தில் அருவியின் முழக்கம்.
உயிருள்ள பாலம்!
இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் கண்ணில் பட்டது, மரங்களின் வேர்களால் பின்னப்பட்ட பாலம். மரங்களும் மனிதர்களும் சேர்ந்து உருவாக்கிய உயிருள்ள பாலம்! காசி பழங்குடியினர் ரப்பர் மர வேர்களை ஆண்டாண்டு காலமாகக் கட்டி, பின்னி வளர்த்திருக்கிறார்கள். இளம் வேர்கள் பலப்பட பதினைந்து ஆண்டுகள்வரை காத்திருக்கிறார்கள். ஒரு தலைமுறை தொடங்கியதை அடுத்த தலைமுறை முடிக்கிறது. அதனால் இந்தப் பாலங்கள் வெறும் கட்டுமானம் அல்ல; இயற்கையுடன் போராடாமல், அதனோடு இணைந்து வாழ்ந்த மனித அறிவுத்திறனுக்கான மிக அழகான எடுத்துக்காட்டு.
அந்த இரட்டை வேர்ப் பாலத்தைக் கடந்த பிறகும் பயணம் முடியவில்லை. மேலும் ஒன்றரை கிலோமீட்டர் ஏற வேண்டும். உடல் சோர்ந்துபோன தருணங்களிலும் தூரத்தில் கேட்ட அருவியின் சத்தம் உற்சாகம் அளித்தது. இறுதியில் வானவில் அருவி கண்ணில் பட்ட தருணம், அந்தப் பயணத்தின் எல்லாச் சோர்வையும் மறக்க வைத்தது. அருவி மீது விழுந்த சூரிய ஒளி வானவில்லாக மின்னியது. எல்லாரும் அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தனர். சில இடங்களில் இயற்கைப் பேசும்போது மனிதர்கள் அமைதியாகிவிடுகிறார்கள். அது உண்மைதானே!
- சித்ரா ரங்கராஜன் | chithra.rajan16@gmail.com