‘ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்கிற பழமொழி தத்துவார்த்தமாகத் தோன்றலாம். இயல்பு வாழ்க்கையிலும் அது பிரதிபலித்த தருணம்தான் ‘ஃபெரி’ (தோணி) பயணம்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள மன்றோ தீவில் நீர்ப் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படும் தோணிச் சேவையைக் கணக்கில்கொண்டு, மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது அன்றாடப் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
‘ரயிலுக்காகக் காத்திருக்கணுமே’, ‘ரோடு வழியா போகணும்னா டைம் ஆகும்’ என்று யோசிக்கும் நேரத்தில், பத்து நிமிடங்களில் மன்றோ தீவிலிருந்து பெருமோன் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறது தோணிச் சேவை.
இரண்டு படகுகள். அவற்றின் மீதிருக்கும் சமதளப் பரப்பு. ஒட்டுமொத்த எடை யையும் இழுத்துச் செல்கிற அளவுக்கு வலுவான இன்ஜின்; அதன் செயல்பாட்டை, ஒவ்வொரு முறையும் பரிசோதிக்கின்றனர்.
அதன்பிறகே ஆள்களை ஏற்றுகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் உட்காருவதற்கென்று தனியே இடமுண்டு. ‘அது வேண் டாமே’ என்பவர்கள், தோணி காட்டுகிற இயற்கையழகை நின்றபடியே ரசிக்கலாம்.
நேரடி அனுபவம்
சமீபத்தில் மன்றோ தீவில் தோணி அனுபவத்தைப் பெற முடிந்தது. ஆட்டோ, கார்களில் இருந்து இறங்கிய ஆள்கள் தோணியில் ஏற, இரும்பு ஏணிகளின் மூலம் கார், ஆட்டோ, பைக் ஆகியவை தோணியில் ஏற்றப்படுகின்றன.
சில நிமிடங்களில், கரையின் ஒருபகுதியில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை ஒருவர் அவிழ்க்க, ஷேர் ஆட்டோவின் புறப்படுதலைப் பிரதிபலிக்கிற சத்தத்துடன் தோணியின் இன்ஜின் இயங்கத் தொடங்கியது.
மெல்ல நீர்ப்பரப்புக்குள் தோணி நகர நகர, ‘அவ்வளவு எடையையும் இது தாங்குமா’ என்கிற சந்தேகம் தலைதூக்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. அதே நேரத்தில், நீரைக் கிழித்துக்கொண்டு பயணிக்கிற தோணியின் கீழ்ப்பகுதியைப் பார்த்தால், ‘இதுவும் ஒரு சாகசம் தானோ’ என்கிற எண்ணம் தோன்றும்.
தொலைவில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம், தோணி நின்ற இடம், அலைகளற்ற பரந்த நீர்ப்பரப்பு, சின்ன சின்ன அசைவுகளுடன் இரைந்து கொண்டிருக்கிற தோணி என்று அனைத்தையும் மனசுக்குள் உள்வாங்கி முடிப்பதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடுகிறது.
அதன்பிறகு, கரையில் இருக்கும் பிடிமானத்தோடு தோணி கயிற்றால் கட்டப்பட, மெல்ல மனிதர்கள் இறங்க, அதன் தொடர்ச்சியாக வாகனங்கள் தரை இறங்குகின்றன. பிறகென்ன, தோணிக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான்.
இரவில் வேறு அனுபவம்
பிற்பகலில் கொல்லம் சென்றுவிட்டு, அடர்த்தியான மழை பொழிந்த இரவுப் பொழுதில் மீண்டும் தோணியை வந்தடைந்தபோது, அது இன்னும் விசித்திரமாகத் தெரிந்தது. பகலில் தென்பட்ட உற்சாகம் வடிந்து, இருள் தரும் மெல்லிய பயம் உள்ளுக்குள் புரண்டது. தோணியில் ஏறியபோது அது இன்னும் அதிகமானது.
இந்த முறை மழை நம்மை ‘இங்கேயே இரு’ என்று உட்காருமிடத்தைக் காட்டியது. திரைகளைக் கிழிக்கும் ஆவேசத்தில் காற்று வீச, அதைப் பிடிக்க முயன்றபோது கைக்கெட்டும் தொலைவில் நீர் படகின்மீது மோதிக்கொண்டிருப்பது தெரிந்தது. அனைத்தையும் தாண்டி, பாதி வழியில் தோணி நின்றபோது மனம் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது.
சில நொடிகளில் மீண்டும் இன்ஜின் சத்தம் கேட்ட பிறகே நிம்மதி எட்டிப்பார்த்தது. மெல்லக் கரையைத் தொட்டு, தோணியை விட்டுத் தரையில் கால்வைத்ததும் ‘அப்பாடா’ என்றிருந்தது. அப்போதும் பகல், இரவு வித்தியாசம் பாராட்டாமல் வழக்கம்போல அசைந்தாடிக் கொண்டிருந்தது தோணி.
தோணிச் சேவைக்காக ஓர் ஆளுக்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேரளம் செல்கிற அன்பர்கள், தோணியில் பயணித்தால் புதுமையான அனுபவத்தைப் பெறலாம்!
- uthayasankaran.p@hindutamil.co.in