தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கொளத்தூரில் 1982ஆம் ஆண்டு நடந்த போட்டியில்தான், ராஜரத்தினம் கபடி விளையாடியதை முதன்முதலில் பார்த்தார் சண்முகசுந்தரம். டைகரின் பாய்ச்சல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரையிலும் இம்மியும் குறையவில்லை.
“ஒரு பெரிய விழா எடுத்து அவருக்கு ‘அகில உலக கபடி ஏகச் சக்கரவர்த்தி’ன்னு ஒரு பட்டம் கொடுக்கணும். அவரை மாதிரி இன்னொரு பிளேயர் சரித்திரத்தில் வரவே முடியாது. ராஜரத்தினம் அண்ணன் கபடிக்குச் செஞ்சதுக்கு ஏதாவது கைம்மாறு செய்யணும். இன்னும் போற்றப்பட வேண்டியவர்” என்றார்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து, கபடி மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி, தமிழ்நாடு அணிக்காக விளையாடியுள்ளார் சண்முகசுந்தரம்.
“1987 நேஷனல் கேம்ஸில் ராஜரத்தினம் அண்ணன் தலைமையில் விளையாடி, வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். அவரு இருக்கும்போது கவலையில்லாம ஆடலாம். என்ன ஆனாலும் அவரு பார்த்துப்பாருன்னு நம்பிக்கை இருக்கும். இளம் வீரர்களை ரொம்ப உற்சாகப்படுத்துவார். அவர் தலைமையில் விளையாடியதே எனக்குப் பெருமை.”
ஜுனியர், சீனியர் வேறுபாடு பார்க்காதவர் மட்டுமல்ல; சாதி, மதங்களையும் கடந்தவர் ராஜரத்தினம் என்கிறார் சண்முகசுந்தரம்.
சண்முகசுந்தரம்
“எங்கேயும் சாதிப் பிரிவினை இருக்கக் கூடாது; விளையாட்டுல சுத்தமா இருக்கவே கூடாது. அண்ணன் ஒருத்தரை மனுஷனாகத்தான் பார்ப்பாரு. எல்லார்கிட்டயும் அன்போடு பழகுவாரு. ஏதாவது போட்டிக்கு வந்தாருன்னா களத்துக்கு வெளியேயும் அவர் பின்னாடியே சுத்திட்டு இருப்பேன். அனைவரையும் ஈர்க்கும் காந்த சக்தி அவரிடம் இருந்தது” என்கிறார்.
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருமண விழாவில் தலையில் விளக்கு தூக்கி வருபவர் ரசித்தார் என்பதற்காக, அவருக்காகத் தனியாக வாசித்தார் என்று சொல்வார்கள். அவர் பெயரைக்கொண்ட கபடி டைகரும் எளிய மனிதர்களின் ரசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
“நான் சின்ன வயசில உடல் உழைப்பு அதிகமா தேவைப்படும் வேலைகளைச் செஞ்சிருக்கிறதால, தொழிலாளர்கள் மீது எப்போதும் எனக்குப் பரிவு உண்டு. எந்த ஊருக்குப் போனாலும் போட்டியைப் பார்க்க வரும் எளிய மனிதர்களோட கட்டாயம் நேரம் செலவழிப்பேன். விளையாட்டுல சாதி, மதம் பார்ப்பவன் மனுஷனே கிடையாது” என்கிறார் ராஜரத்தினம்.
மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்கள் தன்னுடைய கபடியை ரசிக்க வேண்டும் என்பதற்காகப் பல அணிகளைத் தானே ஒருங்கிணைத்து அங்கே சென்று விளையாடியுள்ளார் ராஜரத்தினம்.
“நம்ம கபடியைப் பார்த்து மக்கள் சந்தோஷப்படுவதைவிட வேற என்னங்க வேணும்? மகாராஷ்டிராவில சத்ரபதி சிவாஜியை எப்படி மதிப்பாங்களோ, அதே போன்று கபடியையும் மதிப்பார்கள். மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேகூட என் கபடிக்கு ரசிகர். எந்தப் பேதமும் இல்லாம மக்கள் கூடுவது விளையாட்டுக்குத்தான்” என்று பெருமைப் பொங்கச் சொல்கிறார் ராஜரத்தினம்.
ராஜரத்தினத்தின் கபடி உயிர் துடிப்புள்ளது என்கிறார் சண்முகசுந்தரம். “டீம்ல உள்ள எல்லாரும் நம்பிக்கை இழந்தாலும் ராஜரத்தினம் அண்ணன் கடைசி ரெய்டு வரைக்கும் நம்பிக்கையோட ஆடுவாரு. 1987இல் தூத்துக்குடியில் நடந்த சிவந்தி தங்கக் கோப்பை போட்டியின் ஃபைனலில் தனி ஆளாக ஐசிஎஃப் அணியை ஜெயிக்க வச்சார். அந்த ஆட்டத்தை எல்லாம் விவரிக்க வார்த்தைகள் இல்ல.
பரிசா அவருக்கு ஒரு கலர் டிவி கொடுத்தாங்க. அவர் ஆடும்போது நாற்பது நிமிஷமும் பரபரப்பா இருக்கும். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 80களில் ராஜரத்தினம் அண்ணன் விளையாட வரும்போது எம்ஜிஆரை மாதிரி அவரை ரசிகர்கள் கொண்டாடுவாங்க!”
ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியுடன் ராஜரத்தினம்.
ராஜரத்தினம் உச்சத்தில் இருந்தபோது, பல்விந்தர் சிங் ஃபிட்டா, அஷன் குமார் போன்ற வீரர்களும் சிறப்பாக விளையாடி வந்தனர். அவர்களுக்கும் ராஜரத்தினத்திற்கும் உள்ள வித்தியாசம் டைகரோட ஆல்-ரவுண்ட் ஆட்டம்தான் என்கிறார் சண்முகசுந்தரம்.
“வட இந்திய வீரர்கள் எல்லாம் பவர் கேம் மட்டும்தான் ஆடுவாங்க. அட்டாக், டிஃபென்ஸ் ரெண்டையும் செஞ்சவங்க குறைவு. பவர், டெக்னிக், ஸ்கில், கேப்டன்ஷிப், மத்தவங்களைத் தட்டிக் கொடுத்து ஆட வைக்கும் குணம், நுட்பமான கபடி அறிவு எல்லாம் இருந்த ஒருத்தர் ராஜரத்தினம்தான். அதனால்தான் இந்தியா முழுவதும் அவரை மதிச்சாங்க.”
பல்விந்தர் சிங், ராஜரத்தினத்தின் மீது வைத்திருந்த மரியாதைக்கு, 1987 நேஷனல் கேம்ஸில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஒரு சம்பவத்தை சண்முகசுந்தரம் நினைவுகூர்ந்தார்.
“ராஜரத்தினம் ரெய்டுக்குப் போயிட்டு, பல்விந்தரைத் தொட்டு விட்டதாகச் சொன்னார். முதலில் இல்லை என்று சொன்ன பல்விந்தர், ராஜரத்தினம் நடுக்கோட்டிலிருந்து மீண்டும் சென்று அவுட் என்று சொன்னவுடன், சாரி ராஜா, நான் அவுட்டுதான் என்று வெளியேறினார்.” பல்விந்தர் இந்திய கபடி வரலாற்றில் தலைசிறந்த வீரர்.
ராஜரத்தினத்தின் கபடி வரலாறு ஒரு புத்தகமாக வெளிவந்தால், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்கிறார் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளராக இருந்த சண்முகசுந்தரம். “இப்படி ஒரு கபடி வீரர் இருந்தாருன்னு நம்புறது அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும். ராஜரத்தினம் ஒரு சகாப்தம்!” என்கிறார் சண்முகசுந்தரம்.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.
தொடர்புக்கு: tnrags@gmail.com