வாழ்வு இனிது

ஒரே ரைடில் 6 பாயிண்ட்ஸ் எடுத்த மாயாவி! | ‘டைகர்’ ராஜரத்தினம் 19

டி.என் ரகு

சீனாவில் நடந்த 1990ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றது ஒரே ஒரு தங்கப் பதக்கம். வாங்கிக் கொடுத்தது கபடி. அந்த இந்திய அணியில் ஒரே ஒரு தென்னிந்தியர் ராஜரத்தினம்.

அந்தத் தங்க மகன் சென்னை திரும்பியபோது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் தமிழ்நாடு கபடிக் குடும்பமே கூடியிருந்தது. அப்போது ராஜரத்தினம் வேலை பார்த்து வந்த ஐசிஎஃப் அணியைச் சேர்ந்த கருணாநிதியும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்.

“ராஜரத்தினம் தங்கம் வாங்குனதில் ஐசிஎஃப்க்குப் பெருமை. அவரை ஊர்வலமா அயனாவரம் ஐசிஎஃப் குவார்டர்ஸுக்கு அழைச்சுட்டுப் போனோம். மத்தியானம் ஒரு மணிக்கு அந்த ஊர்வலம் ராஜரத்தினம் வீட்டுக்கு வந்துச்சி. ஐசிஎஃப் கபடி டீமைச் சேர்ந்த மத்த பிளேயர்ஸ் எல்லாம் வழக்கம் போல சாயந்திரம் அஞ்சு மணிக்குப் பயிற்சிக்காக கிரவுண்டுக்கு வந்தோம்.

அவரு வீட்டுப் படுக்கை அறை ஜன்னல் வழியா எங்களைப் பார்த்துட்டு, ராஜரத்தினமும் ஷார்ட்ஸைப் போட்டுக்கிட்டு பிராக்டிஸுக்கு வந்துட்டார். 'என்ன விட்டுட்டு நீங்க எப்படி விளையாடலாம்னு' கேட்டார். நாங்கெல்லாம் அசந்துட்டோம்” என்று ஆச்சரியம் நீங்காமல் நினைவுகூர்ந்தார் கருணாநிதி.

பயணக் களைப்பு, வெற்றிக் களிப்பு எதுவுமே ராஜரத்தினத்திற்கும் கபடிக்கும் இடையே நிற்க முடியவில்லை. ஒரு குழந்தைக்கு ஐஸ் க்ரீம் கொடுக்கும் சந்தோஷத்தை, ராஜரத்தினத்திற்குக் கபடி எப்போதும் கொடுத்துவந்தது.

அவர் கபடியைத் தனிச் சிறப்போடு மட்டுமல்லாமல் எப்போதும் குதூகலமாக, கொண்டாட்டமாக ஆடியுள்ளார். தன்னோடு விளையாடியவர்களுக்கும் அந்த உற்சாகத்தைக் கடத்தியுள்ளார். இயற்கையாகவே அபரிமிதமான கபடி திறமை அவருக்கு இருந்தாலும், பயிற்சி செய்வதை அவர் நிறுத்தவே இல்லை. திறமையும் உழைப்பும் இருக்கும் ஒருவர் தோற்றதாகச் சரித்திரம் உண்டா?

கருணாநிதி - பிரேம் குமார்

“அவர் டாப்ல இருக்கும்போது அன்னிக்குத்தான் கபடி விளையாட வந்த பிளேயர் கிட்ட கூட சகஜமா தோள்ல கை போட்டு, வாடா புள்ள ஆடலாம்னு பேசுவார். அவரோட வாழ்க்கையிலேயே ஜுனியர், சீனியர் பாகுபாடு பார்த்ததே இல்லை. ஐசிஎஃப் டீம்ல விளையாடும்போது நாங்க தோக்கிற மாதிரி இருந்தாலும் தம்பி ஆடலாம்னு தட்டிக் கொடுத்து ஆட வச்சிடுவாரு. ஐசிஎஃப் அணியில, ரயில்வே அணியில அவர் கூட விளையாண்ட நாள்களை மறக்க முடியாது” என்கிறார் கருணாநிதி.

தமிழ்நாடு மின்சார வாரிய அணியில் ராஜரத்தினம்தான் இளையவர். ஐசிஎஃபில் சீனியர்; மற்ற இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அவர் ஐசிஎஃப் அணிக்கே புதிய வெற்றிப் பாதை போட்டார். அவர் வருவதற்கு முன் அகில இந்திய ரயில்வே போட்டிகளில் கலந்து கொள்வதையே வழக்கமாகக் கொண்ட ஐசிஎஃப், வெற்றிக் கொடி நாட்டுவதைப் புதுப் பழக்கமாக மாற்றினார்.

'போனஸ்' ராஜா, ஜான்சன், பிரபாகரன், பிரேம் குமார், கருணாநிதி போன்ற தரமான வீரர்கள் ஐசிஎஃப்பில் இருந்தாலும் ராஜரத்தினம் என்கிற ஆளுமையால்தான் அந்த அணி வரலாறு படைக்க முடிந்தது!

“ஐசிஎஃப்போட ஸ்பெஷாலிட்டி என்னனா கபடிக் களத்தில எல்லாரும் எல்லா வேலையையும் செய்வோம். ரயில்வே, மின்சார வாரிய அணி பிளேயர்ஸ் வேறு வேறு இடங்களில் வேலை பார்ப்பாங்க; அதனால ஒரே இடத்தில் ரெகுலரா பிராக்டிஸ் செய்யறது கஷ்டம். ஆனா ஐசிஎஃப் பிளேயர்ஸ் ஒரே இடத்தில் வேலைங்கிறதால பிரேக் இல்லாம பிராக்டிஸ் செய்வோம்.

ஆபீஸுக்குக்கூடப் போகாம இருப்போம்; கிரவுண்டுக்கு வராம இருக்க மாட்டோம். கோச் தெய்வசிகாமணியின் கட்டுப்பாடும் எங்க வெற்றிக்கு அடித்தளமா இருந்துச்சு. தமிழ்நாட்டுக்கு வெளியதான் நிறைய மேட்ச் ஆடுவோம். அப்ப ப்ரோ கபடி லீக் இருந்திருந்தா, எல்லா ஐசிஎஃப் பிளேயர்ஸும் கலக்கியிருப்போம்” என்றார் பத்து முறைக்கு மேல் சீனியர் நேஷனல்ஸ் போட்டியில் கலந்து கொண்ட கருணாநிதி.

“காட்பாடியில் நடந்த ஒரு போட்டியில் ஐசிஎஃப் இரண்டு அணிகளா விளையாண்டோம். இரண்டு அணிகளும் ஃபைனலுக்கு வந்துட்டோம். ரசிகர்களெல்லாம் ரெண்டுமே ஐசிஎஃப் டீம்ஸ், அதனால ரிசல்ட்டை முடிவு செஞ்சு ஆடுவாங்கன்னு கிளம்பிட்டாங்க. ஆனா, நாங்க அனல் பறக்க ஆடியதைப் பார்த்துட்டு, கலைஞ்ச கூட்டமெல்லாம் திரும்ப வந்திடுச்சு. எங்களுக்குக் கபடிதான் எல்லாம்.”

ஐசிஎஃப்க்காக ராஜரத்தினம் விளையாடியதில் கருணாநிதி மறக்க முடியாத போட்டி மகாராஷ்டிரத்திலுள்ள யவத்மாலில் நடந்தது என்றார்.

“மகாராஷ்டிர போலீஸுக்கு எதிரான போட்டியில், ஒரே ரைடில் ஆறு பாயிண்ட்ஸ் மாயாவி மாதிரி எடுத்தார். எப்படி எடுத்தார்னு அவருக்கும் தெரியாத அதிசய ரைடு அது. அவரோட ஜம்ப் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிடிக்க வரும் எதிரணி வீரரைத் தாண்டிக் குதிச்சு லேண்ட் ஆகும்போது முதுகில உதைச்சு பாயிண்ட் எடுப்பாரு.”

ஐசிஎஃப் அணியில் ராஜரத்தினம் ரைட் கார்னரில் விளையாடுவார். லெஃப்ட் கார்னரில் கன்னியாகுமரி மாவட்டதைச் சேர்ந்த பிரேம் குமார் ஆடுவார். “சின்ன வயசுலேருந்து அவரை எனக்குத் தெரியும் என்பதால், எனக்கும் அவருக்கும் கிரவுண்டுல அண்டர்ஸ்டாண்டிங் சூப்பரா இருக்கும். அவரோட கபடியைக் கணிக்கவே முடியாது.

சின்ன கேப்புலகூட விலாங்கு மீன் மாதிரி நழுவி வந்துடுவாரு. ரெண்டு, மூணு பிளேயர்ஸ் புடிக்க வந்தாலும் அசால்டா ஜம்ப் பண்ணி நடுக்கோட்டைத் தொடுவாரு. எல்லாரும் அவர் கபடியை ரசிக்க முடியும். கபடியை நல்லா தெரிஞ்சவங்களும் ரசிப்பாங்க; புதுசா பார்ப்பவர்களும் கொண்டாடுவாங்க. அதுதான் ராஜரத்தினம்.”

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். தொடர்புக்கு: tnrags@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT